தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை 138 பேர் குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை  138 பேர் குண்டர் சட்டத்தில் கைது  போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்
x
தினத்தந்தி 28 Sep 2021 12:19 PM GMT (Updated: 28 Sep 2021 12:19 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை 138 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 138 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு
தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு தொடர்ந்து ரவுடித்தனம் செய்து வருபவர்களை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று ரவுடிகளையும் கைது செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கைது
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:-
கடந்த 23, 24-ந் தேதி ஆகிய நாட்களில் நடந்த தீவிர தேடுதல் வேட்டையில் 75 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 53 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை 138 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், ரவுடித்தனம் செய்பவர்கள், அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித்திரிபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story