கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிய வீடு, வீடாக ஆய்வு


கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிய வீடு, வீடாக ஆய்வு
x
தினத்தந்தி 28 Sept 2021 6:55 PM IST (Updated: 28 Sept 2021 6:55 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சியில் 100 சதவீத இலக்கை அடைய, கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிய வீடு, வீடாக ஆய்வு நடக்கிறது.

திண்டுக்கல்:

100 சதவீத இலக்கு

திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. இதன் விளைவாக கொடைக்கானல், பழனி ஆகிய 2 நகராட்சிகள், 15 ஊராட்சிகளில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 

இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையொட்டி கடந்த 26-ந்தேதி தடுப்பூசி செலுத்தும் நபர்களுக்கு பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டு, மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதனால் அன்றைய தினம் 7 ஆயிரத்து 632 பேர் தடுப்பூசி செலுத்தினர். 

இதன்மூலம் திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 82 சதவீதம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

வீடு, வீடாக ஆய்வு 

எனவே மீதமுள்ள 18 சதவீதம் பேரையும் கண்டறிந்து ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி செலுத்தி 100 சதவீத இலக்கை அடைவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. 

இதற்காக தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிய வீடு, வீடாக ஆய்வு செய்யும்படி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன்படி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை பிரித்து கொடுத்தல், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு பெறுதல், வரி செலுத்துதல் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

Next Story