இ-சேவை மைய பணியாளர் மர்ம சாவு
கூத்தாநல்லூர் அருகே இ-சேவை மைய பணியாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே இ-சேவை மைய பணியாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இ-சேவை பணியாளர் மர்ம சாவு
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம், கிளியனூர், தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 65). இவர் வடபாதிமங்கலத்தில் இ-சேவை மைய பணியாளராக பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்து இ-சேவை மைய அலுவலகம் சென்றவர் இரவு 9 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்கள் இ-சேவை மைய அலுவலகம் சென்று பார்த்தனர்.
அப்போது, இ-சேவை மைய அலுவலகம் வெளிக்கதவு பூட்டிய நிலையில் இருந்தது. இதனால் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது, மாரியப்பன் இ-சேவை மைய அலுவலகத்துக்குள் கீழே விழுந்து கிடந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாரியப்பன் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதனர்.
கொலை செய்யப்பட்டாரா?
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடபாதிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன மாரியப்பனுக்கு இரண்டு மனைவி, 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இ-சேவை மைய அலுவலகத்துக்குள் மாரியப்பன் தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிக்கதவு பூட்டப்பட்ட நிலையில் இ-சேவை மைய அலுவலகத்துக்குள் மாரியப்பன் எப்படி இறந்து கிடந்தார்? அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story