அறந்தாங்கி அருகே கார்-லாரி மோதி கொண்ட விபத்தில் நடந்து சென்ற பெண் பலி போக்குவரத்து பாதிப்பு
அறந்தாங்கி அருகே காரும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் வேகமாக சென்ற கார் ஓரமாக நடந்து சென்ற பெண் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கீரமங்கலம்:
டியூசன் போன குழந்தைகள்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே குன்னக்குரும்பி கிராமத்தை சேர்ந்தவர் மெய்யேந்திரன். இவர், தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (வயது 36), இவர்களுக்கு பூர்விகாஸ்ரீ, திவ்யாஸ்ரீ என்ற 2 மகள்களும், ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.
தேன்மொழி தினமும் தனது மகள்களை டியூசன் அழைத்துச் செல்வதும், டியூசன் முடிந்த பிறகு அவரே வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
கார்-லாரி மோதலில் பெண் பலி
அதேபோல நேற்று இரவும், தேன்மொழி தனது மகள்களை டியூசன் முடிந்து வீட்டிற்கு அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் ஓரமாக நடந்து அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி நோக்கிச் சென்ற ஒரு கார், குன்னக்குரும்பியில் எதிரே வந்த கனரக லாரியில் மோதி எதிர்பாராதவிதமாக சாலை ஓரம் நடந்து சென்ற தேன்மொழி மீது மோதியது. குழந்தைகள் 2 பேரும், சற்று முன்னதாக சென்றதால் காயம் ஏதுமின்றி உயிர்தப்பினார்கள்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த தேன்மொழியை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேன்மொழி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது காரில் இருந்த ஏர்பேக் ஓபன் ஆகி இருந்ததால் கார் டிரைவர் காயமின்றி தப்பியதோடு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதும், அதேபோல் லாரி டிரைவரும் தப்பியதும் தெரிய வந்தது.
இதனால் அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் ரோட்டில் நின்ற வாகனங்களை அகற்றிய பிறகு போக்குவரத்து சரியானது. இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குழந்தைகளை டியூசன் அழைத்து சென்று விட்டு திரும்பிய பெண் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story