ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்


ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 29 Sept 2021 12:46 AM IST (Updated: 29 Sept 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமானநிலையத்தில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

செம்பட்டு,செப்.29-
கொரோனா பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்காக இந்தியாவில் இருந்து சிறப்புமீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி விமான நிலையத்தில் இருந்தும்  வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் தங்கம் கடத்தல் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த கடத்தல்காரர்களுக்கு உதவியதாக சுங்கத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து வினோத், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இப்ராகிம்சாகுல் ஆகியோரிடம் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மாரிமுத்து வினோத் 1,980 கிராம் தங்கமும், இப்ராகிம் சாகுல், 1990 கிராம் தங்கமும் வீட்டு உபயோக பொருட்களில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 1 கோடியே 92 லட்சம் ஆகும். தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிட் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக திருச்சி விமான நிலையத்தில் அடிக்கடி கடத்தல் தங்கம் பிடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story