மாணவிகள் 7 பேருக்கு கொரோனா; தனியார் பள்ளி மூடல்


மாணவிகள் 7 பேருக்கு கொரோனா; தனியார் பள்ளி மூடல்
x
தினத்தந்தி 28 Sep 2021 8:09 PM GMT (Updated: 28 Sep 2021 8:09 PM GMT)

மாணவிகள் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனியார் பள்ளி மூடப்பட்டது.

பெரம்பலூர்:

7 மாணவிகளுக்கு கொரோனா
பெரம்பலூர் நகரில் மகளிர் பயிலும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ்-2 பயிலும் ஒரு மாணவிக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவருடன் வகுப்பில் பயின்ற மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த மாணவி உள்பட மொத்தம் 7 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் அந்த பள்ளிக்கு இன்று (புதன்கிழமை) முதல் வருகிற (அக்டோபர்) 3-ந்தேதி வரை 5 நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி மூடப்பட்டது.
மாணவருக்கு தொற்று
இதற்கிடையே பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயிலும் ஒரு மாணவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த மாணவரை தனிமைப்படுத்தி கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுரை கூறினார். மேலும், அந்த மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவருடன் இருந்த மற்ற மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை.
முதியவர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 918 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 605 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.  பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் ஒன்றியத்தில் 2 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 3  பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 2  பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 2  பேர் என மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஆலத்தூர் தாலுகா சீத்தாராமபுரத்தை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்.
இதுவரை கொரோனாவிற்கு 237 பேர் பலியாகி உள்ளனர். தற்போது கொரோனா வெகுவாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தற்போது மொத்தம் 76 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் 40 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 26 பேர் திருச்சி, தஞ்சை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Next Story