வல்லத்தை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
வல்லத்தை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பழனிமாணிக்கம் எம்.பி. பேச்சுவார்த்தை நடத்தினர்.
வல்லம்;
வல்லத்தை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பழனிமாணிக்கம் எம்.பி. பேச்சுவார்த்தை நடத்தினர்.
தஞ்சை மாநகராட்சி
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு ஏறத்தாழ 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 2 பல்கலைக்கழகங்கள், தனியார் பொறியியல், கலை, பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் பள்ளிகள் பல உள்ளன. வல்லம் பேரூராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கருத்து கேட்பு கூட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அதில் பெரும்பாலானோர் வல்லத்தை தஞ்சை மாநகராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வல்லம் பேரூராட்சியை தஞ்சை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும், வல்லத்தை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரியும் நேற்று வல்லம் அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்பு சார்பில் ஒரு நாள் முழுவதும் அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கடைகள் அடைப்பு
இதன்படி நேற்று காலை வல்லத்தில் கடைகள் அடைக்கப்பட்டு கடை வீதி மற்றும் காய்கறி மார்க்கெட் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. டீக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் சைக்கிள்களில் கேனில் டீ வைத்து விற்பனை நடைபெற்றது. நேற்று காலை 7.30 மணி வரை வல்லத்தில் 350- க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதைத்தொடர்ந்து நேற்று காலை 7.45 மணி அளவில் தஞ்சை எஸ். எஸ். பழனிமாணிக்கம் எம்.பி., வல்லத்துக்கு நேரில் வந்து அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது வணிகர்கள் வல்லம் பேரூராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது உள்பட பல கோரிக்கைகளை வணிகர்கள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
இதைகேட்டுக்கொண்ட எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி., வணிகர்களின் கோரிக்கைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த கடைகளை காலை 8 மணிக்கு பிறகு வியாபாரிகள் மீண்டும் திறந்தனர்.
இதுகுறித்து வல்லம் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
தஞ்சை மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சியை இணைக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், வல்லத்தை நகராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்திவல்லம் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஒரு நாள் கடை அடைப்பு நடைபெறும் என அறிவித்து இருந்தோம். இதன்படி கடைகளை அடைத்திருந்தோம். இந்நிலையில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. வாக்குறுதியை ஏற்று கடையடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்று கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக வல்லத்தில் கடையடைப்பு போராட்ட அறிவிப்பையொட்டி வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story