3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
கர்நாடக பால் கூட்டமைப்பு அலுவலக வளாகத்தில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தம்பதி உள்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
பெங்களூரு: கர்நாடக பால் கூட்டமைப்பு அலுவலக வளாகத்தில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தம்பதி உள்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
பழமையான குடியிருப்பு
பெங்களூரு ஆடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டைரி சர்க்கிளில் கர்நாடக மாநில பால் கூட்டமைப்பின் தலைமை அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் வளாகத்தில் பால் கூட்டமைப்பில் பணியாற்றும் ஊழியர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. அந்த குடியிருப்பு 3 மாடிகளை கொண்டதாகும். அந்த குடியிருப்பு கட்டிடம் மிகவும் பழமையானதாகும். அந்த குடியிருப்பில் மொத்தம் 11 வீடுகள் உள்ளன.
கட்டிடம் மிகவும் பழமையானதாக இருந்ததாலும், எந்த நேரத்திலும் இடிந்து விழுவதற்கு வாய்ப்பு இருந்ததாலும், அங்கு வசித்த 5 குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் குடியிருப்பில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தனர். அதே வேளையில் 3 குடும்பத்தினர் மட்டுமே அந்த குடியிருப்பில் வசித்து வந்ததாக தெரிகிறது. அவர்களும் குடியிருப்பை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு குடியேறுவதற்கு முடிவு செய்திருந்தார்கள்.
கட்டிடம் இடிந்து விழுந்தது
அதே நேரத்தில் ஏற்கனவே வீடுகளை காலி செய்திருந்த 5 குடும்பத்தினர் தங்களது வீட்டில் இருந்த சில பொருட்களை எடுத்து செல்லாமல், அங்கு வைத்திருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று காலை 7.30 மணியளவில் ஒரு வீட்டின் மேற்கூரை லேசாக இடிந்து விழுந்தது. அங்கு வசித்தவர்கள் மற்ற 2 குடும்பத்தினருக்கும் தெரிவித்தனர். அத்துடன் கர்நாடக பால் கூட்டமைப்பை சேர்ந்த அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்கள்.
உடனே அதிகாரிகள் குடியிருப்பை விட்டு அனைவரும் வெளியே வரும்படி உத்தரவிட்டார்கள். இதையடுத்து, குடியிருப்பில் வசித்தவர்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து விழுந்து தரை மட்டமானது. கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்திருந்தது. இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி தம்பதி உள்பட 5 பேர் லேசான காயம் அடைந்தனர். ஆனாலும் அவர்கள் குடியிருப்பில் இருந்து வெளியே வந்து விட்டனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பொருட்கள் சேதம்
3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக ஆடுகோடி போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் வேறு யாரும் சிக்கி உள்ளார்களா? என சோதனை மேற்கொண்டனர். அப்போது கட்டிட இடிபாடுகள் மற்றும் குடியிருப்பு வீடுகளுக்குள் யாரும் சிக்கவில்லை என்று தெரியவந்தது. ஆனால் அந்த குடியிருப்பில் வசித்தவர்களின் உடைமைகள் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்தது.
ஏற்கனவே காலி செய்திருந்த 5 குடும்பத்தினருக்கு சொந்தமான பொருட்களும், உடைமைகளும் சேதம் அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள்.
55 ஆண்டு பழமையான கட்டிடம்
அப்போது அந்த குடியிருப்பு கட்டிடம் கடந்த 1965-ம் ஆண்டு கட்டப்பட்டது. 55 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டதால், அது பழமையான கட்டிடமாக மாறி இருந்தது. அந்த கட்டிடம் பழமையானது என்பதால் தற்போது பெய்து மழை காரணமாக அது இடிந்து விழுந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் கட்டிடம் இடிந்து விழும் தருவாயில் இருப்பது பற்றி அறிந்து, அங்கு வசித்தவர்களும், நேற்று காலையில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததும் வீடுகளில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகளின் அலட்சியம்
அதே நேரத்தில் பழமையான கட்டிடம் என்பதால், அதனை இடித்து அகற்றும்படி கர்நாடக பால் கூட்டமைப்புக்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்ததாகவும், பால் கூட்டமைப்பு அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Related Tags :
Next Story