வாலிபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்
சிக்பள்ளாப்பூர் தாலுகாவில் திருடுபோன மோட்டார் சைக்கிளை மீட்க முயன்றபோது வாலிபர்களை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
சிக்பள்ளாப்பூர்: சிக்பள்ளாப்பூர் தாலுகாவில் திருடுபோன மோட்டார் சைக்கிளை மீட்க முயன்றபோது வாலிபர்களை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
விவசாயி
சிக்பள்ளாப்பூர்(மாவட்டம்) தாலுகா பெரேசந்திரா போலீஸ் எல்லைக்கு உட்பட்டது மரவேனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரா ரெட்டி. விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை கிராமத்தை அடுத்துள்ள தனது விவசாய தோட்டத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்தி விட்டு தோட்டத்திற்குள் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் ராமச்சந்திராவின் மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு சென்றதை பார்த்துவிட்டார். இதனால் அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் கைக்கிளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
துப்பாக்கியால் சுட்டனர்
இருப்பினும் ராமச்சந்திரா தனது கிராமத்திற்கு சென்று சில இளைஞர்களை மோட்டார் சைக்கிள்களில் அழைத்துக்கொண்டு திருடுபோன தனது மோட்டார் சைக்கிளை தேடும் பணியில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபர்கள் மரவேஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே மர்ம நபர்களை ராமச்சந்திரா மற்றும் அவருடன் சென்ற இளைஞர்கள் நெருங்கினர்.
அதைப்பார்த்த மர்ம நபர்கள் திடீரென்று தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் ராமச்சந்திரா மற்றும் அவருடன் வந்த வாலிபர்களை நோக்கி சுட்டனர். இதில் கங்கராஜ் என்பவர் மீது குண்டு பாய்ந்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இருப்பினும் ராமச்சந்திராவும், அவருடன் வந்த வாலிபர்கள் திருடர்களை நெருங்கி பிடிக்க முயன்றனர். இதனால் அவர்கள் ராமச்சந்திராவின் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகினர்.
வலைவீச்சு
துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த கங்கராஜை அவருடன் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிக்பள்ளாப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டார். பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு வாசுதேவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள், மர்ம நபர்கள் விட்டுச் சென்ற ராமச்சந்திராவின் மோட்டார் சைக்கிளில் சோதனை நடத்தினர். அப்போது அதில் ஒரு பை இருப்பது கண்டறியப்பட்டது.
அதில் பழைய பதிவு எண் பலகைகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து பேரேசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சிக்பள்ளாப்பூர் தாலுகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story