தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டி எதிரொலி
சேலம் நரசோதிப்பட்டி 3-வது வார்டு இந்தியன் வங்கி காலனி நுழைவு வாயிலில் 2 குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த தொட்டிகள் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என்று கடந்த 27-ந் தேதி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளி சரிசெய்யப்பட்டது. இந்த உடனடி நடவடிக்கைக்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
-ஊர்மக்கள், நரசோதிப்பட்டி, சேலம்.
===
கழிவுநீர் கால்வாயில் அடைப்பு
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் எல்.சி. காலனி சாலை பகுதியில் சாக்கடை கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு சாக்கடை கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுபற்றி பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த சாக்கடை கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-அருண், சேலம்.
====
தெருவிளக்கு எரியவில்லை
சேலம் மல்லூர் அருகே அக்கரபாளையம் ஊராட்சி பாலம்பட்டி 6-வது வார்டு திருச்செங்கோடு மெயின் ரோட்டில் சுமார் ஒரு மாத காலமாக தெருவிளக்கு சரிவர எரிவதில்லை. இதனால் அந்த பகுதியை கடந்து செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
-மணிகண்டன், பாலம்பட்டி.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சாலையானது மிகவும் முக்கியமான சாலை. இந்த சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை தெருவிளக்குகள் இரவு நேரங்களில் சரிவர எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் இரவு நேரங்களில் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் சிறுசிறு விபத்துகளும் நடக்கின்றன. எனவே மிகவும் முக்கியமான இந்த பகுதியில் இரவு நேரங்களில் தெருவிளக்குகளை தொடர்ந்து எரியச் செய்ய வேண்டும்.
-கோ.கலைநிதி, தர்மபுரி.
===
சாலையில் குப்பைதொட்டி
சேலம் மாநகராட்சி சின்ன திருப்பதியில் கன்னங்குறிச்சி பிரதான சாலையின் வலதுபுறம் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டியானது சாலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே சாலையின் ஓரத்தில் குப்பை தொட்டியை வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.காமேஷ், சின்ன திருப்பதி, சேலம்.
====
கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா கெளாபாறை கிராமத்தில் இருந்து அரூர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். பஸ்சில் சென்று படித்து வரும் அந்த மாணவர்களுக்கு காலை-மாலை என இருவேளையிலும் ஒரு பஸ் மட்டும் வந்து செல்கிறது. இதனால் மாணவ- மாணவிகள் மற்றும் வெளியூர் செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆறுமுகம், கெளாபாறை, தர்மபுரி.
சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையம் வருவதற்கு சின்னப்பம்பட்டி, இளம்பிள்ளை வழியாக பஸ்கள் சரிவர வருவது இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள காப்பரதம்பட்டி, கரிக்கப்பட்டி, வங்களியூர், பணிக்கணுர் ஆகிய பகுதி பொதுமக்கள் பஸ் வசதி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்த பகுதியில் விவசாயம், விசைத்தறி, தினக்கூலி தொழிலர்கள் அதிகம் வசிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கா.வீரப்பன், சேலம்.
====
பொதுநூலகம் அமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் ராஜாபாளையம் கிராமத்தில் மாணவ-மாணவிகள், இளைஞர்களின் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், நல்ல எண்ணங்களை மனதில் விதைக்கவும் அந்த பகுதியில் பொதுநூலகம் அமைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நல்லது.
மு.ரமேஷ் முத்துசாமி, ராஜாபாளையம், சேலம்.
===
சேறும், சகதியுமான சாலை
சேலம் திருவாகவுண்டனூர் தேசிய நெடுஞ்சாலை வலதும் புற அணுகுசாலையில் இருந்து மேத்தா நகருக்குள் செல்லும் வழிப்பாதை மிக குறுகலாக உள்ளது. மேலும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. நடந்து செல்லவே பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் கீழே விழுந்துவிடுகிறார்கள். கடந்த மாதம் மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு செ்னறனர். ஆனால் இன்று வரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. 500 மீட்டர் தூரம் உள்ள இந்த மண்சாலையை தார்சாலையாக புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.ஆர்.கணேசன், மேத்தா நகர், சேலம்.
====
அடிப்படை வசதிகள் இல்லை
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, நரசிங்கபுரம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட அரசு போக்குவரத்து கழககம் தெற்கு பகுதியில் உள்ள 13-வது வார்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய குடியிருப்பு பகுதியில் முட்புதர்களை அகற்றிவிட்டு குடிநீர், மின்சாரம், தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பொதுமக்களின் நலன் கருதி போர்க்கால முறையில் உடனடியாக செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?
-லட்சுமணன், நரசிங்கபுரம், சேலம்.
----------
சாலை ஓரத்தில் மதுக்கடை
சேலம் மாவட்டம் தாரமங்கலாம் ஒன்றியம் வங்களியூர் கள்ளுக்கடை மேடு பகுதியில் சாலை ஓரத்தில் மதுக்கடை உள்ளது. மேலும் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. அதேபோல் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் அந்த வழியாகத்தான் செல்கின்றனர். இந்த மதுக்கடையால் சாலை விபத்து அதிகம் நடக்கிறது. எனவே சாலை ஓரத்தில் உள்ள இந்த மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.சரவணன், கரிக்காப்பட்டி, சேலம்.
===
மேம்பாலம் அமைக்கப்படுமா?
தர்மபுரி மாவட்டம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெண்ணாம்பட்டி ஹவுசிங் போர்டு செல்லும் வழியில் ரெயில்வே கேட் உள்ளது. ரெயில் வரும் போது கேட் மூடப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அடிக்கடி நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மா.கலையரசன், தர்மபுரி.
===
Related Tags :
Next Story