தூத்துக்குடி கடற்கரைக்கு மர்மமான முறையில் மிதந்து வந்த பைபர் படகு போலீசார் விசாரணை


தூத்துக்குடி கடற்கரைக்கு மர்மமான முறையில் மிதந்து வந்த பைபர் படகு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Sept 2021 4:40 PM IST (Updated: 29 Sept 2021 4:40 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கடற்கரைக்கு மர்மமான முறையில் மிதந்து வந்த பைபர் படகை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி கடற்கரைக்கு மர்மமான முறையில் மிதந்து வந்த பைபர் படகால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பைபர் படகு
தூத்துக்குடி மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு ஆட்கள் மற்றும் பொருட்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் உளவுப்பிரிவு போலீசார், கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆனாலும் அவ்வப்போது கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் நேற்று கடலுக்கு சென்று விட்டு கரைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது திரேஸ்புரத்தில் இருந்து சிறிது தூரத்தில் கடலுக்குள் ஒரு பைபர் படகு அனாதையாக மிதந்து கொண்டு இருந்தது. இதனால் மீனவர்கள் அந்த படகை மீட்டு திரேஸ்புரம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
போலீசார் விசாரணை
அந்த மர்ம படகு குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக குலாப் புயல் எதிரொலியாக தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் ஏதேனும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகு கடலுக்குள் இழுத்து வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் அந்த படகின் எண்கள் அழிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் படகு உரிமையாளரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம படகு மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

--------------


Next Story