யோகாசனம் செய்வதாக கூறி நட்சத்திர ஏரியில் மிதந்த தொழிலாளி
யோகாசனம் செய்வதாக கூறி, கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மிதந்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
எழில் கொஞ்சும் ஏரி
‘மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் என்றவுடன், நம் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பது அங்குள்ள நட்சத்திர ஏரி தான். நகரின் மையப்பகுதியில் இந்த ஏரி அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
இயற்கை எழில்கொஞ்சும் அந்த ஏரி, சுற்றுலா பயணிகளின் சிறந்த பொழுது போக்கு அம்சம் ஆகும். இங்கு ஆனந்தமாய் படகு சவாரி செய்வதை சுற்றுலா பயணிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அதன்படி நேற்று முன்தினம் பிற்பகலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகுகளில் சவாரியில் ஈடுபட்டனர். அப்போது ஏரியின் மையப்பகுதியில் அசைவின்றி ஒருவர் மிதந்து கொண்டிருந்தார்.
உடல் மிதப்பதாக தகவல்
இதனைக்கண்ட படகோட்டி ஒருவர், ஏரியில் தவறி விழுந்த ஒருவர் பிணமாக மிதந்து கொண்டிருப்பதாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதேபோல் கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் ஏரிக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், ஒரு படகு மூலம் ஏரியின் ைமயப்பகுதிக்கு சென்றனர். அங்கு அசைவின்றி கிடந்த உடலை தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த நபரின் கை, கால்கள் திடீரென அசைந்தன. இதனை கண்ட போலீசாரும், தீயணைப்பு படையினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த நபரை பிடித்து தீயணைப்பு படையினர் படகில் ஏற்ற முயன்றனர். ஆனால் அந்த நபர் படகில் ஏற மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கரைக்கு வர சம்மதம்
தான் முறையாக யோகாசனம் கற்றவன் என்றும், சிவனடியாரான தன்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்றும் தீயணைப்பு படையினரிடம் அவர் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து வாக்குவாதம் செய்த அவர் தண்ணீரில் இருந்து வெளியே வர மறுத்தார்.
ஏரியின் தண்ணீர் குளிர்ந்த நிலையில் இருப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று போலீசாரும், தீயணைப்பு படையினரும் எச்சரித்தனர். தீயணைப்பு படையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதால், ஒரு கட்டத்தில் அந்த நபர் கரைக்கு வர சம்மதம் தெரிவித்தார்.
ஆனால் தீயணைப்பு படையினருடன் படகில் ஏற அவர் மறுத்து விட்டார். ஏரியில் நீந்தியபடி அவர் கரைக்கு வந்து சேர்ந்தார்.
கூலித்தொழிலாளிக்கு எச்சரிக்கை
இதற்கிடையே ஏரிக்கரையில் தயாராக இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கபாண்டி (வயது 39) என்று தெரியவந்தது.
நட்சத்திர ஏரியில் யாருக்கும் தெரியாமல் நீந்தி சென்று மையப்பகுதியில் அசைவு எதுவுமின்றி 20 நிமிடங்களாக யோகாசனத்தில் தங்கபாண்டி ஈடுபட்டு இருக்கிறார்.
இனிவருங்காலத்தில் இதுபோன்று நீர்நிலைகளில் எந்தவொரு ஆசனமும் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். நட்சத்திர ஏரியில் தொழிலாளி ஒருவர் யோகாசனம் செய்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story