பணி நிரந்தரம் செய்யக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சுமார் 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் நேற்று அண்ணாமலை பல்கலைக்கழக பூமா கோவில் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஊழியர் சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்களை உடனடியாக பணிநிரந்தம் செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
நடவடிக்கை
இதையடுத்து ஊழியர் சங்க தலைவர் மனோகரன் கூறுகையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு கையகப்படுத்தியது. அன்று முதல் தற்போது வரை 340 தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் மிக, மிக குறைவான ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story