விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் பார்வையாளர் அறிவுரை கூறியுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் செலவினங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் டி.மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 6, 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவின வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அவற்றில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.9 ஆயிரமும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.34 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.85 ஆயிரமும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விதிகளை மீறினால் நடவடிக்கை
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவின கணக்குகளை ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு ஒப்படைக்க தவறுபவர்கள் மீது தேர்தல் ஆணையத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனைத்து அரசியல் கட்சியினரும், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிமுறைகளின்படி அதை பின்பற்றி நடக்க வேண்டும். விதிகளை மீறி செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சரவணன் (வளர்ச்சி), ராமகிருஷ்ணன் (தேர்தல்), தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, அ.தி.மு.க. நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story