பட்டா கேட்டு தாலுகா அலுவலகம் முற்றுகை
பட்டா கேட்டு நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கோட்டை, நேருநகர், சொக்கு பிள்ளைபட்டி ஆகிய கிராமங்களில் 10 ஆண்டுகளாக வசிக்கிற மக்களுக்கு பட்டா வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்கவில்லை. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை மேற்கண்ட கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு ஆதித்தமிழர் மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் வீ.பி.ராமன் தலைமை தாங்கினார். வளரும் தமிழகம் கட்சியின் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் மலைச்சாமி முன்னிலை வகித்தார். போராட்டத்தின்போது வருவாய்த்துறையினருடன் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.
பின்னர் முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தாங்கள் கொண்டு வந்த மனுக்களை தலைமையிடத்து துணை தாசில்தாரிடம் கொடுத்து விட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் நிலக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story