சேத்தியாத்தோப்பு அருகே, சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை


சேத்தியாத்தோப்பு அருகே, சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 29 Sept 2021 10:30 PM IST (Updated: 29 Sept 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே, சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கடலூர், 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். அவள் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினருக்கு இரவு சாப்பாடு கொண்டு செல்வது வழக்கம். 

அதன்படி கடந்த 12.2.2019 அன்று அந்த சிறுமி, தனது உறவினருக்கு இரவு 7 மணி அளவில் சாப்பாடு கொண்டு சென்றாள். பின்னர் சாப்பாடு கொடுத்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாள்.
அந்த சிறுமி சேத்தியாத்தோப்பு- கும்பகோணம் சாலையில் உள்ள அவர்களது குல தெய்வம் கோவில் அருகில் வந்த போது, குமாரக்குடியை சேர்ந்த பாலகுரு மகன் தொழிலாளி திலகர் என்கிற குணசேகரன் (வயது 34). தொழிலாளி கட்டமணியார் என்கிற ஜெயசங்கர் (49) ஆகிய 2 பேரும், அந்த சிறுமியை வழிமறித்தனர்.

கூட்டு பாலியல் பலாத்காரம்

தொடர்ந்து அந்த சிறுமியை திலகர் தாக்கினார். பின்னர் அந்த சிறுமியை 2 பேரும் கடத்தி அங்குள்ள கோவிலுக்கு பின்னால் கொண்டு சென்றனர். அங்கு வைத்து சிறுமியை 2 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி சென்றனர்.
இதனால் மனமுடைந்த அந்த சிறுமி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடன் அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.

இது பற்றி அவரது தாய் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திலகர்,  ஜெயசங்கர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சாகும் வரை ஆயுள் தண்டனை

இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.
அதில், இவ்வழக்கில் சிறுமியை தாக்கிய திலகருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும், சிறுமியை கடத்திச்சென்ற குற்றத்திற்காக திலகர், ஜெயசங்கருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறினார்.

இது தவிர சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 2 பேரும் சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ரூ.10 லட்சம் இழப்பீடு

தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகை கொடுத்து, ஈடு செய்ய முடியாது என்றாலும், அவர் தன்னிச்சையாக வாழ வழிவகை செய்யும் வகையில், 30 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டர், மாநில அரசு திட்டங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாச்செல்வி ஆஜரானார்.

Next Story