புதுவை உள்ளாட்சி தேர்தலுக்கு தடையா?


புதுவை உள்ளாட்சி தேர்தலுக்கு தடையா?
x
தினத்தந்தி 30 Sept 2021 1:35 AM IST (Updated: 30 Sept 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இடஒதுக்கீடு குளறுபடி தொடர்பான வழக்கில் இன்று தொடங்க இருந்த வேட்புமனு தாக்கலை தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

சென்னை, செப்.30-
புதுவை மாநிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அப்போது தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் 2011-ம் ஆண்டு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து தேர்தல்   அறிவிக்கப் பட்டபோது அதை எதிர்த்த வழக்கில் தடை விதிக்கப்பட்டதால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. 
இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அக்டோபர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்குமாறு உத்தரவிட்டது.
கட்சிகள் வலியுறுத்தல்
இதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மாநில தேர்தல் ஆணையத்தால் தீவிரப்படுத்தப்பட்டது.   அந்த  வகையில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி பொது, பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், அட்டவணை இனத்தவர்கள் போட்டியிடும் இடங்களும் அறிவிக்கப்பட்டன.
இந்த இடஒதுக்கீட்டிலும், வார்டு மறுவரையறையிலும் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக அனைத்து அரசியல் கட்சியினரும் குற்றஞ்சாட்டினார்கள். அவற்றை சரிசெய்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
தேர்தல் அறிவிப்பு
இத்தகைய சூழ்நிலையில் புதுவை மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப்பின் உள்ளாட்சி தேர்தலை 3 கட்டமாக நடத்துவதற்கான அறிவிப்பினை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் கடந்த 22-ந்தேதி வெளியிட்டார். 
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும் அரசியல் கட்சிகளுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த தேர்தலுக்கு தடைபெற முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகேஷ்குமார். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:-
வார்டு
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 நகராட்சிகள், 10 பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் கடந்த 22-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாண்டிச்சேரி நகராட்சிகள் சட்டப்படி எஸ்.சி. பிரிவை சேர்ந்த மக்கள் அதிகம் வசிக்கும் வார்டுகளைத்தான் அவர்களுக்கு ஒதுக்க வேண்டும். புதுச்சேரி நகராட்சியில் 22, 24, 28, 33 ஆகிய 4 வார்டுகள் எஸ்.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த 4 வார்டுகளிலும் எஸ்.சி. பிரிவு மக்கள் குறைவாக வசிக்கின்றனர். 13, 17, 23 ஆகிய வார்டுகளில்தான் அவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
ரத்து
அந்த வார்டுகளை அவர்களுக்கு ஒதுக்காமல், பிற வார்டுகளை ஒதுக்கியது சட்டப்படி தவறாகும். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ள பிற பிரிவினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். சட்டப்படி வார்டுகளை ஒதுக்கீடு செய்ய புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கோரியிருந்தார்.
பதில் அளிக்க வேண்டும்
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், ‘மனுதாரர் சுட்டிக்காட்டும் இந்த தவறுகளை சரி செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது. எனவே, இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும். அதற்குள் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம், புதுச்சேரி அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதுவரை வேட்புமனு தாக்கலை அக்டோபர் 4-ந்தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
தள்ளிப்போகுமா?
தேர்தலை தள்ளிவைக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகுமோ? என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Next Story