சேலத்தில் ரேஷன் அரிசி பதுக்கிய மாவு மில் உரிமையாளர் கைது


சேலத்தில் ரேஷன் அரிசி பதுக்கிய மாவு மில் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2021 2:33 AM IST (Updated: 30 Sept 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ரேஷன் அரிசி பதுக்கிய மாவு மில் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்
மாவு மில் உரிமையாளர்
சேலத்தில் அப்பள வியாபாரிகள் சிலர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதில் அப்பளம் தயாரித்து விற்பனை செய்வதாக சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொண்டலாம்பட்டி பகுதியில் அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட பல்வேறு கடைகளில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது பூலாவரி ஆத்துக்காட்டில் உள்ள ஒரு மாவு மில்லில் சோதனை நடத்தினர். அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அதன் உரிமையாளர் நடராஜ் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
புகார்கள்
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
சேலத்தில் பல இடங்களில் அப்பளம் தயாரிக்கப்படுகிறது. இதில் சிலர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதன் மூலம் அப்பளம் தயாரிப்பதாக புகார்கள் வந்தன. அதன்படி கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ஏராளமான கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஜாரிகொண்டலாம்பட்டி ரங்கதாஸ் தெருவை சேர்ந்த நடராஜ் என்பவரது மாவு மில்லில் சோதனை நடத்திய போது அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்து கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து அங்கு 22 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகிறோம். மேலும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story