ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய காலை 4 மணிக்கு ேடாக்கன் வாங்க காத்திருக்கும் மக்கள்


ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய காலை 4 மணிக்கு ேடாக்கன் வாங்க காத்திருக்கும் மக்கள்
x
தினத்தந்தி 30 Sept 2021 2:34 AM IST (Updated: 30 Sept 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டியில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய காலை 4 மணிக்கு டோக்கன் வாங்க மக்கள் காத்திருக்கின்றனர்.

காரியாபட்டி, 
காரியாபட்டியில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய காலை 4 மணிக்கு டோக்கன் வாங்க மக்கள் காத்திருக்கின்றனர். 
ஆதார் அட்டை 
 காரியாபட்டி தாலுகாவில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வாழும் பொதுமக்கள் முற்றிலும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் ஆதார் அட்டை வாங்கவும், ஆதாரில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், செல்போன் எண்கள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை செய்ய வேண்டுமென்றால் காரியாபட்டி தாலுகா அலுவலகம் வந்து தான் மாற்ற வேண்டியுள்ளது. 
ஆனால் காரியாபட்டி தாலுகாவில் ஆதார் அட்டை எடுக்கும் மையத்தில் ஒரே ஒரு நபர் வேலை செய்து வருகிறார். 
கூடுதல் பணியாளர்கள் 
இந்த மையத்தில் ஆதார் எடுக்க வேண்டுமென்றால் அதிகாலை 4 மணிக்கே வந்து காத்திருந்தால் தான் டோக்கன் வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல மணி நேரம் டோக்கன் வாங்க காத்திருந்தாலும் காத்திருக்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படுவதில்லை. ஒரு நாளைக்கு 25 முதல் 30 டோக்கன்கள் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு நாளைக்கு 50 முதல் 100 பேர் வரை டோக்கனுக்கு காத்திருக்கின்றனர். 
இதனால் ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கு பல நாட்கள் தாலுகா அலுவலகம் வந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் ஆதார் எடுக்கும் மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து பொதுமக்களுக்கு ஆதார் திருத்தம் மற்றும் புதிய ஆதார் அட்டை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story