மணல் லாரி மோதியதில் கல்லூரி முதல்வர் பலி
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதியதில் கல்லூரி முதல்வர் பலியானார்.
புதுக்கடை:
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதியதில் கல்லூரி முதல்வர் பலியானார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கல்லூரி முதல்வர்
புதுக்கடை அருகே உள்ள பள்ளிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 62). இவர் ஒரு தனியார் கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்து வந்தார்.
இவருடைய மனைவி ஜெருஷா, தலைமை ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு ஜெபினா என்ற மகளும், ஜெனிப் என்ற மகனும் உள்ளனர். ஜெபினா டாக்டராகவும், ஜெனிப் வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார்கள்.
லாரி மோதி சாவு
இந்தநிலையில் நேற்று காலையில் ஜெயக்குமார் கல்லூரி நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். புதுக்கடை சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மணல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது.
அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மணல் லாரி, ஜெயக்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் அவர் சிக்கி கொண்டார். இதனால் உடல் நசுங்கி அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
சோகம்
இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பலியான ஜெயக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி லாரி டிரைவரான குலசேகரம் பொன்மனையை சேர்ந்த கணேசன்(31) என்பவரை கைது செய்தனர்.மணல் லாரி மோதி கல்லூரி முதல்வர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story