கொரோனாவுக்கு கணவர் பலியானதால் மகளுடன் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி


கொரோனாவுக்கு கணவர் பலியானதால் மகளுடன் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 30 Sept 2021 3:11 AM IST (Updated: 30 Sept 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

கதக் அருகே கொரோனாவுக்கு கணவர் உயிர் இழந்ததால், மகளுடன் ஆற்றில் குதித்து பெண் தற்கொலைக்கு முயன்றார். இதில் தாய் உயிர் தப்பினார், அவரது மகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கதக்: கதக் அருகே கொரோனாவுக்கு கணவர் உயிர் இழந்ததால், மகளுடன் ஆற்றில் குதித்து பெண் தற்கொலைக்கு முயன்றார். இதில் தாய் உயிர் தப்பினார், அவரது மகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கொரோனாவுக்கு கணவர் சாவு

கதக் மாவட்டம் ரோனா தாலுகா கொலேஆலூரு கிராமத்தை சேர்ந்தவர் சங்கமேஷ். இவரது மனைவி உமாதேவி. இந்த தம்பதிக்கு 4 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தார்வாரில் உள்ள கல்லூரியில் படிக்கிறார். உமாதேவியுடன், மகள்கள் தனுஸ்ரீ(வயது 10), பிரியங்கா(8) மற்றும் 4 வயது மகள் வசித்து வந்தனர். சங்கமேஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு இறந்து விட்டார்.

மேலும் அவர், புதிதாக வீடு ஒன்றையும் கட்டி வந்திருந்தார். கணவர் இறந்த காரணத்தால், அந்த வீட்டை உமாதேவியால் கட்ட முடியவில்லை. மாறாக அந்த வீட்டை கட்டுவதற்கு சங்கமேஷ் பல்வேறு நபர்களிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது. ஏற்கனவே கணவர் கொரோனாவுக்கு இறந்து விட்டதால், 4 பிள்ளைகளையும் வளர்க்க உமாதேவி சிரமப்பட்டு வந்துள்ளார்.

மகளுடன் ஆற்றில் குதித்தார்

இந்த நிலையில், நேற்று காலையில் தனது 3 மகள்களுடன் உமாதேவி வெளியே புறப்பட்டு சென்றார். பக்கத்து கிராமத்தில் வசிக்கும் பாட்டி வீட்டுக்கு செல்வதாக மகள்களிடம் உமாதேவி கூறி இருந்தார். ஆனால் கிராமத்தில் ஓடும் மல்லபிரபா ஆற்றுக்கு சென்ற உமாதேவி தனது 3 மகள்களுடன் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது ஆற்றில் குதிக்க வேண்டாம் என்று தனுஸ்ரீ கூறியுள்ளார். அதற்கு உமாதேவி மறுத்து விட்டதாக தெரிகிறது.

உடனே தனது சகோதரி பிரியங்காவுடன், தனுஸ்ரீ அங்கிருந்து ஓடி வந்துவிட்டாள். ஆனால் தனது 4 வயது மகளுடன் உமாதேவி ஆற்றில் குதித்தார். தனது தாய், சகோதரியுடன் ஆற்றில் குதித்திருப்பது பற்றி கிராம மக்கள், உறவினர்களிடம் சிறுமி தனுஸ்ரீ தெரிவித்தாள். உடனே கிராம மக்களும், ரோனா போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்களும் விரைந்து வந்து ஆற்றில் குதித்த உமாதேவி, மகளை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

சிறுமியின் கதி என்ன?

6 மணிநேர போராட்டத்திற்கு பின்பு கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உமாதேவி மயங்கி நிலையில் கிடந்தார். அவரை தீயணைப்பு படைவீரா்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் 4 வயது மகளை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த சிறுமியின் கதி என்ன? என்பது தெரியவில்லை. சிறுமியை தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு கணவர் உயிர் இழந்ததாலும், வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாததாலும் மகள்களுடன் ஆற்றில் குதித்து உமாதேவி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து ரோனா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story