ரெயில் நிலையங்களில் அதிரடி சோதனை: கஞ்சா, மதுபான பாட்டில்கள் பறிமுதல்; 2 பேர் கைது


ரெயில் நிலையங்களில் அதிரடி சோதனை: கஞ்சா, மதுபான பாட்டில்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2021 1:56 PM IST (Updated: 30 Sept 2021 1:56 PM IST)
t-max-icont-min-icon

ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசாரின் அதிரடி சோதனையில் கஞ்சா, மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு
ரெயில்களில் கஞ்சா, போதை பொருட்கள், ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்தவகையில், ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், ஐ.ஜி. கல்பனா நாயக், டி.ஐ.ஜி. ஜெயகவுரி ஆகியோர் மேற்பார்வையில், சென்னை ரெயில்வே காவல் மாவட்ட சூப்பிரண்டு இளங்கோ கண்காணிப்பில் ரெயில்வே போலீசார் அனைத்து ரெயில் நிலையங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்தநிலையில், நேற்று காலை ஈரோடு ரெயில் நிலையத்துக்கு சண்டிகரில் இருந்து மதுரைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது எஸ்-5 பெட்டியில் பயணம் செய்த 2 வாலிபர்களை போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களது பையை போலீசார் சோதனை செய்தனர்.

கஞ்சா-மதுபான பாட்டில்கள்
அப்போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை போலீசார் கண்டனர். இதுகுறித்து அவர்கள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் தர்மபுரி மாவட்டம் ஆலப்புரம் பகுதியை சேர்ந்த சரவணகுமார் (வயது 25), சரத்குமார் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 17 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.இதேபோல், நேற்று மைசூரில் இருந்து திருப்பதிக்கு சென்ற ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 5-வது நடைமேடையில் நின்றது. அப்போது அந்த ரெயிலின் டி-2 பெட்டின் முன்பு பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அப்போது ரெயில் நிலையத்தில் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ரெயில்வே போலீசார், இதைக்கண்டு சந்தேகமடைந்து பையை திறந்து பார்த்தனர். அப்போது அதில் மதுபான பாட்டில்களும், போதை பொருட்களும் இருந்தது தெரியவந்தது.

பறிமுதல்
இதையடுத்து, அந்த பையில் இருந்த 21 லிட்டர் மதுபான பாட்டில்களையும், போதை பொருட்களையும் ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த பையை நடைமேடையில் வைத்து சென்றவர் யார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அனைத்து ரெயில் நிலையங்களிலும், கூடுதல் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் ரெயில்வே போலீசார் ரெயில்கள் மூலம் நடைபெறும் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story