2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய்; தீயணைப்பு துறையினர் மீட்டனர்


2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய்; தீயணைப்பு துறையினர் மீட்டனர்
x
தினத்தந்தி 30 Sept 2021 2:47 PM IST (Updated: 30 Sept 2021 2:47 PM IST)
t-max-icont-min-icon

திருமுல்லைவாயலில் ரெயில் மோதி கணவர் இறந்த துக்கம் தாங்காமல் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கணவர் சாவு
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் ஜாக் நகர் விஜயலட்சுமி தெருவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 34). இவரது கணவர் முனியப்பன். இவர்களுக்கு கமலேஷ் (4) என்ற மகனும், ரக்சனா (2) என்ற மகளும் உள்ளனர்.முனியப்பன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 22-ந் தேதி இந்துக்கல்லூரி-ஆவடி ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் அடிபட்டு பலியானார்.இந்நிலையில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் ஐஸ்வர்யா மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர், 2 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

கிணற்றில் குதித்தார்
இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யாவின் கணவர் முனியப்பனுக்கு விசேஷ காரியம் நடக்க இருந்த நிலையில், உறவினர்கள் 2 தினங்களுக்கு முன்னரே வந்து வீட்டில் வந்து தங்கியுள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஐஸ்வர்யா திடீரென வீட்டில் இருந்து தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். இதையடுத்து, திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவில் பகுதிக்கு சென்று அங்குள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் திடீரென குதித்தார்.இதை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த ஆவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோவா, மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கயிறு கட்டி மீட்பு
தாயும், பிள்ளைகளும் தண்ணீரில் தத்தளித்த நிலையில், முதலில் இரு குழந்தைகளையும் பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி பத்திரமாக மீட்டனர்.பின்னர், சிக்கிய ஐஸ்வர்யாவை கயிறு கட்டி கிணற்றில் இருந்து மிகவும் சிரமப்பட்டு தீயணைப்பு துறையினர் மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டதன் பலனாக கிணற்றில் குதித்த தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story