கெட்டுப்போன 70 கிலோ இறைச்சி பறிமுதல்


கெட்டுப்போன 70 கிலோ இறைச்சி பறிமுதல்
x
தினத்தந்தி 30 Sept 2021 6:47 PM IST (Updated: 30 Sept 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் நகரில் கெட்டுப்போன 70 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

கொடைக்கானல்:

சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானல் நகர் பகுதியில் ஏராளமான ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில ஓட்டல்கள், விடுதிகளில் கெட்டுப்போன மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறையினருக்கு புகார் வந்தது. 

இதனையடுத்து நேற்று காலை மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை மற்றும் 7 ரோடு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லாரன்ஸ் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கெட்டுப்போன நிலையில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 70 கிலோ கோழி மற்றும் ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் அதிக சாயம் சேர்க்கப்பட்ட நிலையில் கெட்டுப்போன மீன், நண்டு ஆகியவற்றையும் உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

மேலும் நேற்று முன்தினம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த பிரியாணி, புரோட்டா, சப்பாத்தி உள்ளிட்ட உணவு வகைகளையும் உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

 இதனையடுத்து கெட்டுப்போன, காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்தால் ஓட்டல் மற்றும் உணவு விடுதிகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story