பரிசோதனையில் கண்டறியப்பட்ட தரமற்ற விதைகள்


பரிசோதனையில் கண்டறியப்பட்ட தரமற்ற விதைகள்
x
தினத்தந்தி 30 Sept 2021 7:47 PM IST (Updated: 30 Sept 2021 7:47 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் விதை பரிசோதனையால் தரமற்ற விதைகள் கண்டறியப்பட்டு விவசாயிகள் விதைக்கும் முன்பே அவை தடுத்து நிறுத்தப்பட்டு பயிர் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

தேனி: 


விதை பரிசோதனை
தேனி மாவட்டத்தில் சில ஆண்டுகளாக விவசாயிகள் பல்வேறு வகையிலான பயிர் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அதில், மகசூல் குறைவு மற்றும் முளைப்புத்திறன் குறைவு போன்றவற்றால் பாதிப்பு அதிகரித்து வந்தது. விதைத்த விதைகள் சரியாக முளைக்காததால் அதிக உரம் செலுத்தி மண்ணின் வளமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க விதைப் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் அதே நேரத்தில் பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், தேனி விற்பனைக்குழு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விதை பரிசோதனை நிலையத்தில் விதைகள் பரிசோதனை செய்யப்பட்டு அதன் விவரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு விதைகளின் முளைப்புத்திறன் பரிசோதனை, புறத்தூய்மை, இனத்தூய்மை, விதையின் ஈரப்பதம், பிற ரக கலப்பு, பூச்சி மற்றும் நோய்கள் தாக்கப்பட்ட விதைகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தரமற்ற விதைகள்
கடந்த ஆண்டு இந்த விதை பரிசோதனை நிலையத்தில் 2 ஆயிரத்து 336 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 178 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டன. இந்த ஆண்டு பரிசோதனை இலக்காக 2 ஆயிரத்து 630 மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 1,198 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில், 72 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டன.


இவ்வாறு கண்டறியப்பட்ட விதைகளை விற்பனை நிலையங்களில் இருந்து விவசாயிகளுக்கு வினியோகம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயிகள் நேரடியாக அனுப்பிய விதை மாதிரிகளில் தரமற்றவை கண்டறியப்பட்டு அவற்றை விதைக்கும் முன்பே தடுக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு பயிர் பாதிப்பு ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கப்பட்டது.

 விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதையின் தரம் மற்றும் தங்களின் கைவசம் உள்ள விதைகளின் தரத்தை அறிய விதை மாதிரிகளை இங்கு அனுப்பி வைக்கலாம். ஒரு விதை மாதிரிக்கு ஆய்வுக்கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும். விதைப் பரிசோதனை செய்து முளைப்புத்திறன் அறிந்து அதன்பிறகு பயிர் சாகுபடியில் ஈடுபடுவதால் மகசூல் அதிகரிப்பதோடு, பயிர் பாதிப்பும் தடுக்கப்படும். இத்தகவலை தேனி விதை பரிசோதனை அலுவலர் சிங்காரமீனா, வேளாண்மை அலுவலர் சத்தியா ஆகியோர் தெரிவித்தனர்.

Next Story