அரசு நிர்ணயித்த கட்டண விவரத்தை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்


அரசு நிர்ணயித்த கட்டண விவரத்தை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்
x
தினத்தந்தி 30 Sept 2021 8:38 PM IST (Updated: 30 Sept 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து தனியார் பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்த கட்டண விவரத்தை அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் என்று தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேனி: 


அதிக கட்டணம் வசூல்
தேனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தனது மகன் தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிப்பதாகவும், அங்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், இதுகுறித்து புகார் கொடுத்தும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.


இந்த மனுவை நீதிபதி முகமது ஜியாவுதீன் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இந்த மனு மீதான விசாரணையில் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் குமரேசன், பிரதாப்சிங் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த வழக்கு விசாரணையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி இந்த மனு மீதான விசாரணைக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல்முருகன், மாவட்ட கல்வி அலுவலர் ராகவன் ஆகியோர் நேற்று முன்தினம் நேரில் ஆஜராகினர். சம்பந்தப்பட்ட பள்ளியின் தரப்பில் அந்த பள்ளியின் முதல்வரும் ஆஜரானார்.

அறிவிப்பு பலகை
விசாரணையின் போது, சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு ஆணையத்தின் பரிந்துரையின்படி அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். தற்போது கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவுறுத்தியபடி கல்விக் கட்டணத்தில் 85 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையை தொடர்ந்து நீதிபதி அளித்த உத்தரவில், "தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இதை ஆய்வு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

Next Story