சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை. கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் சிக்கியது
வேலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் சிக்கியது.
வேலூர்
வேலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் சிக்கியது.
சார் பதிவாளர் அலுவலகம்
வேலூர் சார்பதிவாளர் அலுவலகம் வேலப்பாடியில் இயங்கி வருகிறது. இங்கு இணை சார்பதிவாளர்களாக வனிதா, நித்யானந்தம் (பொறுப்பு) ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். மேலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் சங்கங்கள் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறுவதாகவும், இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாகவும் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் கடந்த சில நாட்களாக கண்காணித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை 5 மணியளவில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு திடீரென சென்றனர். அலுவலகத்தின் உள்ளே இருந்தவர்கள் வெளியே செல்லாதவாறும், வெளியே உள்ளவர்கள் உள்ளே வராதபடியும் பார்த்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இணை சார்பதிவாளர்கள் அறை, ஆவணங்கள் அறை, அலுவலர்களின் அறை, கழிவறை, பீரோவின் அடியில், சாமி படத்தின் பின்புறம், மேசையின் அடியில், குப்பை தொட்டி என்று பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை செய்தனர்.
கணக்கில் வராத ரூ.1¾ லட்சம் சிக்கியது
இந்த சோதனையில் கழிவறை, பயன்படுத்தாத மேசையின் அடியில், குப்பை தொட்டி என்று தூக்கி வீசப்பட்ட கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் சிக்கியது. இதுதொடர்பாக அதிகாரிகள், ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற ஊழியர்கள், அலுவலகத்தில் இருந்த பொதுமக்களின் பெயர், முகவரியை போலீசார் எழுதி வாங்கி அவர்களை சோதனைக்கு உட்படுத்தினர். அதன் பின்னரே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். சோதனை மற்றும் விசாரணை இரவு 9 மணி சுமார் 4 மணி நேரம் வரை நீடித்தது.
வேலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story