சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 30 Sept 2021 11:02 PM IST (Updated: 30 Sept 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரெயில்வே பீடர் ரோடு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் உள்வளாகத்தில் கல்வி மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம், வைப்புத்தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 4 மணியளவில் சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலகத்திற்கு சென்றனர். தொடர்ந்து அதிகாரிகள் அலுவலக  கதவுகளை பூட்டிவிட்டு  ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினர். இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 100 மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதை போலீசார் கைப்பற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

சார்பதிவாளர் அலுவலகம்

இதேபோல் பெண்ணாடத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்பட பல்வேறு பணிகளுக்கு சார்பதிவாளர் மற்றும் அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜ் சிங் தலைமையில் மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் அமுதா மற்றும் போலீசார் நேற்று மாலை 4 மணியளவில் பெண்ணாடம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். தொடர்ந்து போலீசார் அலுவலக அறை கதவுகளை பூட்டிவிட்டு ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினர். 
இரவு 7 மணிவரை  நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதையடுத்து ரூ.60 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணாடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story