ரூ.10 லட்சம் புகையிலை பொருட்களை கடத்திய 3 பேர் கைது


ரூ.10 லட்சம் புகையிலை பொருட்களை கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2021 11:21 PM IST (Updated: 30 Sept 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 2 கார்கள், ரூ.3¼ லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம், 

ஆரோவில் கலைவாணர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆரோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று அதிகாலை 3 மணியளவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள், ஏட்டுகள் சிவமூர்த்தி, கன்னியப்பன் ஆகியோர் கலைவாணர் நகர் பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோன் முன்பு 2 கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கார்களில் இருந்து 3 பேர் சாக்கு மூட்டைகளை தூக்கிக்கொண்டு குடோனுக்குள் இறக்கி வைத்தனர்.

3 பேர் சிக்கினர்

உடனே அந்த 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்தனர். பின்னர் அந்த குடோனை சோதனை செய்தபோது அந்த குடோனில் 32 சாக்கு மூட்டைகள் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது அந்த மூட்டைகளுக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் (குட்கா) பாக்கெட்டுகள் 250 கிலோ எடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் 3 பேரும் புதுச்சேரி சின்னசுப்பையா தெருவை சேர்ந்த அருமாத்சிங் மகன் மோகன்லால் (வயது 23), புதுச்சேரி தென்ஆர் சாலை பகுதியை சேர்ந்த மாங்கிலால் மகன் மகேந்தர் (36), பெங்களூரு டவர்கிரீன் கங்கேரி மெயின்ரோட்டை சேர்ந்த குய்யாராம் மகன் ராஜாராம் (30) என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கார்களில் கடத்தி வந்து ஆரோவில் கலைவாணர் நகரில் உள்ள குடோனில் பதுக்கி வைத்து அதனை விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.

பறிமுதல்

இதனை தொடர்ந்து மோகன்லால், மகேந்தர், ராஜாராம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 700 ரொக்கம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 கார்கள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் வானூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story