பா.ம.க. ஆட்சி செய்ய நேரம் வந்துவிட்டது


பா.ம.க. ஆட்சி செய்ய நேரம் வந்துவிட்டது
x
தினத்தந்தி 30 Sept 2021 11:37 PM IST (Updated: 30 Sept 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

அரை நூற்றாண்டு காலம் திராவிட கட்சிகள் ஆண்டது போதும்; பா.ம.க. ஆட்சி செய்ய நேரம் வந்துவிட்டது என்று கூட்டேரிப்பட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கூட்டேரிப்பட்டில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் தலைமை தாங்கினார். அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் பேராசிரியர் தீரன், முன்னாள் எம்.பி. தன்ராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி, மாவட்ட செயலாளர்கள் கனல்பெருமாள், சம்பத், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில இளைஞர் சங்க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாற்றம் தொடங்கட்டும்

தமிழகத்தில் 54 ஆண்டு காலம் 2 கட்சிகள் ஆட்சி, அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேல் கிட்டத்தட்ட 2 தலைமுறைகள் மாறி, மாறி திராவிட கட்சிகள் நாட்டை ஆண்டன. அவர்கள் ஆண்டது போதும், இனி பாட்டாளி மக்கள் கட்சி ஆள வேண்டும், அதற்கு நேரம் வந்துவிட்டது.
நமது கோரிக்கைகளை யாரும் நிறைவேற்றவில்லை, 42 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது. மாற்றம் என்பது உள்ளாட்சியில் இருந்து தொடங்கட்டும், அதுவும் தியாகம் செய்த இந்த விழுப்புரம் மண்ணில் இருந்து தொடங்கட்டும். ஸ்டாலின் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்று நீண்டநாளாக ஆசைப்பட்டார், அது நிறைவேறிவிட்டது. அடுத்து நாம் தான் வரப்போகிறோம், மக்கள் நம்மைத்தான் தேர்வு செய்யப்போகிறார்கள். நம்மிடம் உழைப்பு, உண்மை இருக்கிறது. தமிழகத்தில் இத்தனை ஆண்டு காலம் திராவிட கட்சிகள் ஆண்ட நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, இவர்கள் ஆண்டதுபோதும், மாற்றத்தை கொண்டு வாருங்கள்.

சமூகநீதி பிரச்சினை

10.5 சதவீத இடஒதுக்கீட்டை கொடுத்தது எடப்பாடி பழனிசாமி, அதற்கு சி.வி.சண்முகமும் உறுதுணையாக இருந்தார். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள எங்களுக்கு தயக்கம் கிடையாது. அதே நேரத்தில் டாக்டர் ராமதாஸ் என்ற தனிநபர் இல்லை என்றால் இதை பெற்றிருக்க முடியாது. எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி இப்படி அனைவரிடத்திலும் எத்தனையோ முறை கேட்டோம், போராடினோம், சிறைக்கு சென்றோம், இவ்வளவு போராட்டத்திற்கு பிறகே நாம் வெற்றிப்பாதையில் சென்றிருக்கிறோம். நீங்கள் நன்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும். அதற்காகத்தான் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை டாக்டர் ராமதாஸ் பெற்றுத்தந்திருக்கிறார். வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுத்துள்ளார்கள் என்று ஒரு சிலருக்கு வருத்தம், வன்னியர்களுக்கு மட்டுமல்ல இன்னும் பல சமுதாயத்தினருக்கு தனி இடஒதுக்கீட்டை டாக்டர் ராமதாஸ் பெற்றுத்தருவார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு என்பது தேர்தல் பிரச்சினை, அரசியல் பிரச்சினை கிடையாது, இது ஒரு சமூகநீதி பிரச்சினை. அந்த அடிப்படையில்தான் எல்லோரும் பார்க்க வேண்டும். முன்னேற முடியாத இந்த சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்கினால்தான் தமிழகமும் முன்னேறும் என்ற அந்த கண்ணோட்டத்துடனே பார்க்க வேண்டும்.

3 அடுக்கு நிர்வாகம்

அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வந்தால் மட்டும் போதுமா? விவசாயிகள், நெசவாளர்கள், கூலி தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றம் வந்து விட்டதா? உங்களது வாழ்க்கை இன்றும் அதே நிலையில்தான் இருக்கிறது. உங்களது வாழ்க்கையில் மாற்றம் வர தமிழகத்தில் பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தல் சாதாரண தேர்தல் என்று நினைக்கக்கூடாது. 3 அடுக்கு நிர்வாகம். நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு அடுத்து உள்ளாட்சி அமைப்பு. நாடாளுமன்றம், சட்டமன்றத்தை விட உள்ளாட்சிதான் மிக, மிக முக்கியம் என்பது எனது கருத்து. உங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வது உள்ளாட்சி அமைப்புதான். ஆகவே நல்ல நேர்மையான உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யுங்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு பா.ம.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story