சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 1 Oct 2021 12:49 AM IST (Updated: 1 Oct 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

நெல்லை:
நெல்லை சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.82 ஆயிரம் சிக்கியது.

லஞ்ச ஒழிப்பு சோதனை

தமிழகம் முழுவதும் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதேபோல் நெல்லையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு எஸ்கால் தலைமையில், இன்ஸ்பெக்டர் அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், சீதாராமன், இசக்கி பாண்டி, ஏட்டுகள் ராஜா, பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று மாலை 5 மணி அளவில் நெல்லை டவுன் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

சார் பதிவாளர்

அந்த அலுவலகத்தின் கதவை மூடி யாரும் வெளியே செல்ல முடியாதபடி தடுத்தனர். பின்னர் அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு தொடர்பாக சோதனை நடத்த தொடங்கினர். இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சார் பதிவாளர், ஊழியர்களின் மேஜைகளில் பணம் இருக்கிறதா? என சோதனை நடத்தப்பட்டது.
மேலும், அலுவலக வளாகத்தில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு வாகனத்துக்கும் அந்தந்த ஊழியர்களை தனித்தனியாக அழைத்து வந்து சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர சார் பதிவாளர் அலுவலகத்தில் நின்றிருந்த ஓய்வுபெற்ற அலுவலர், பத்திர எழுத்தர்கள் ஒவ்வொருவரிடமும் சோதனை நடத்தினர்.

ரூ.82 ஆயிரம் சிக்கியது

நேற்று நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.82 ஆயிரத்து 250 சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். அந்த பணம் தொடர்பாக சார் பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் அந்த அலுவலகம் அமைந்திருக்கும் தாலுகா அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story