பெரம்பலூரில் 2 மணி நேரம் பலத்த மழை


பெரம்பலூரில் 2 மணி நேரம் பலத்த மழை
x
தினத்தந்தி 30 Sep 2021 9:15 PM GMT (Updated: 30 Sep 2021 9:15 PM GMT)

பெரம்பலூரில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

பெரம்பலூர்:

பலத்த மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பெரம்பலூரில் நேற்று பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மாலை 3.45 மணியளவில் திடீரென்று பலத்த மழை பெய்ய தொடங்கியது. மழை பெய்தபோது பலத்த காற்றும் வீசியது. அவ்வப்போது இடி, மின்னலும் ஏற்பட்டது. மழைநீர் சாலையில் வெள்ளம்போல் கரைபுரண்டு ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
நனைந்தபடி சென்றனர்
மழை பெய்தபோது வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குளை எரிய விட்டபடி சிரமத்துடன் சென்றனர். மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகள் முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவ-மாணவிகளும், வேலைக்கு சென்று திரும்பியவர்களும் நனைந்தபடி சென்றனர். பலத்த மழையால் ஏரி, குளங்களுக்கு செல்லும் வடிகால், வாய்க்காலில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பெரம்பலூரில் சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. பின்னர் விட்டு, விட்டு மழை பெய்தது. நேற்று பெய்த பலத்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story