திண்டிவனத்தில் துணிகர சம்பவம்: பெண் போலீசிடம் 6½ பவுன் நகை பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


திண்டிவனத்தில் துணிகர சம்பவம்: பெண் போலீசிடம் 6½ பவுன் நகை பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Oct 2021 4:58 PM GMT (Updated: 1 Oct 2021 4:58 PM GMT)

திண்டிவனத்தில் பெண் போலீசிடம் 6½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மரக்காணம் ரோடு காமராஜர் தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவரது மனைவி சத்யா(வயது 34). 
இவர் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.
அதேபோல் சரவணன், ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

நகை பறிப்பு

நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சத்யா பணி முடிந்து வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அவர் வீட்டின் அருகே சென்ற போது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், சத்யாவின் வாகனத்தை வழிமறித்து, அவரை கன்னத்தில் அறைந்தனர்.

 இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். உடனே, அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயின், 1½ பவுனில் மற்றொரு செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

தனிப்படை அமைப்பு

இதுகுறித்து சத்யா திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 
மேலும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திண்டிவனம் உட்கோட்டத்தில் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை உடனடியாக பிடிக்கவேண்டும் என உத்தரவிட்டார். 

இந்த சம்பவத்தின் போது, சத்யா போலீஸ் சீருடையில் வராமல், சாதாரண உடையில்  வந்துள்ளார். இதனால் மர்ம மனிதர்களும் அவர் போலீஸ் என்று தெரியாமல் கைவரிசை காட்டி சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் பெண் போலீசிடம் மா்மநபா்கள் நகை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடரும் சம்பவம்

அதோடு சமீபகாலமாக திண்டிவனம் உட்கோட்ட பகுதிகளில் குற்ற செயல்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இத்தனை நாட்களாக சாதாரண மக்களே பாதிப்புக்குள்ளாகி வந்த நிலையில், தற்போது பெண் போலீஸ்காரர் ஒருவர் நகையை பறிகொடுத்து நிற்கிறார்.

இனியும் இதுபோன்ற கொள்ளை, வழிப்பறி சம்பவம் அரங்கேறுவதற்கு முன்பாக, அதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story