குமரியில் இருந்து 25 குளிர்சாதன பஸ்கள் இயக்கம்
144 நாட்களுக்கு பிறகு குமரியில் இருந்து வெளியூர்களுக்கு நேற்று முதல் 25 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட்டன.
நாகர்கோவில்:
144 நாட்களுக்கு பிறகு குமரியில் இருந்து வெளியூர்களுக்கு நேற்று முதல் 25 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட்டன.
குளிர்சாதன பஸ்கள்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த மே மாதம் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக கொரோனா பரவல் குறைந்ததால் 49 நாட்களுக்கு பிறகு ஜூன் மாதம் 27-ந் தேதி முதல் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
முதலில் குறைவான பஸ்கள் இயக்கப்பட்டன. பிறகு அனைத்து இடங்களுக்கும் பொதுமக்கள் செல்லும் வகையில் தளர்வு அறிவிக்கப்பட்டு கூடுதலாக பஸ்கள் விடப்பட்டது. அதே சமயத்தில் குளிர்சாதன வசதி உடைய பஸ்கள் மட்டும் இயக்கப்படவில்லை.
மீண்டும் இயக்கம்
இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் குளிர்சாதன வசதி பஸ்கள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கடந்த 24-ந் தேதி அறிவித்தார்.
இதனையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரம், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உள்ளிட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த குளிர்சாதன பஸ்கள் அனைத்தும் கழுவி சுத்தம் செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்டது. மேலும் பஸ்களின் உள்ளேயும், வெளியேயும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசு உத்தரவுபடி 144 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட்டது.
பயணிகள் உற்சாகம்
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு 10 பஸ்களும், நெல்லை, மதுரை, ராமேசுவரம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு 15 பஸ்களும் நேற்று காலை முதல் இயக்கப்பட்டன. பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மீண்டும் குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட்டதால் வெகுதொலைவுக்கு செல்லும் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.
அதே சமயத்தில் நேற்று இயக்கப்பட்ட குளிர்சாதன பஸ்களில் பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இனி வரும் நாட்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story