சென்னையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பருவமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? அதிகாரிகள் ஆலோசனை


சென்னையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பருவமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 2 Oct 2021 10:35 AM IST (Updated: 2 Oct 2021 10:35 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம், அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக கமிஷனர் கே.பனீந்தர ரெட்டி தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மண்டலங்களில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர் நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும், மழைகாலங்களில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், மண்டல அலுவலர்களுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அப்போது கே.பனீந்தர ரெட்டி கூறும்போது, ‘அனைத்து மண்டலங்களிலும் திறந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடியாக மூடவோ அல்லது பாதுகாப்பு தடுப்புகளை அமைக்கவோ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மண்டலங்களில் உள்ள பாதுகாப்பற்ற நிலையில் அல்லது இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ள கட்டிடங்கள், சுவர்கள் ஆகியவற்றை கண்டறிந்து அந்த இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்’ என்றார்.

இந்த கூட்டத்தில், மாநில பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் டாக்டர் என்.சுப்பையன், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், பெருநகர சென்னை மநாகராட்சி துணை கமிஷனர்கள், தலைமை என்ஜினீயர்கள், மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story