திருவள்ளூர் மாவட்டத்தில் 371 ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம்; காந்தி ஜெயந்தியையொட்டி நடக்கிறது


திருவள்ளூர் மாவட்டத்தில் 371 ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம்; காந்தி ஜெயந்தியையொட்டி நடக்கிறது
x
தினத்தந்தி 2 Oct 2021 8:43 AM GMT (Updated: 2 Oct 2021 8:43 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியையொட்டி 371 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

கிராம சபை கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெறும் வட்டாரங்களிலும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும் ஊராட்சிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் மேற்படி கிராம ஊராட்சிகள் தவிர்த்து உள்ள 371 ஊராட்சிகளிலும் அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக தவறாமல் கடைபிடித்து இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டத்தை கண்டிப்பாக நடத்த வேண்டும்.

கிராமசபை கூட்டங்களில் கலந்துகொள்ளும் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனை செய்தும், தனி நபர்களுக்கு இடையே 6 அடி சமூக இடைவெளி கடைபிடித்து அமர்வதோடு முககவசம் அணிந்து வர வேண்டும். மேலும் கூட்டத்தில் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி விவரங்கள் குறித்து விவாதித்தல் வேண்டும்.

கிராமசபை கூட்ட ஏற்பாடுகளை கண்காணிக்க...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தற்போது உள்ள பணிகளில் தொகுப்பின் முன்னேற்றத்தினை பகிர்ந்து கொள்ளுதல், 2021-22-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து விவாதிக்க வேண்டும்.

கிராமசபை கூட்டத்தில் பெருவாரியான மக்கள் பங்கேற்கும் பொருட்டு கிராம ஊராட்சிகளில் முழுமையான அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்கள் செய்து சிறப்பான முறையில் கிராமசபை கூட்டத்தை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கிராமசபை கூட்ட ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பார்வையிடவும் ஊராட்சி, ஒன்றிய அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story