ஒவ்வொரு இந்தியரும் ஒரு கதர் ஆடையாவது அணிந்து நெசவாளர் குடும்பங்களின் முன்னேற்றத்துக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்


ஒவ்வொரு இந்தியரும் ஒரு கதர் ஆடையாவது அணிந்து நெசவாளர் குடும்பங்களின் முன்னேற்றத்துக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 Oct 2021 4:58 PM GMT (Updated: 2 Oct 2021 4:58 PM GMT)

ஒவ்வொரு இந்தியரும் ஒரு கதர் ஆடையாவது அணிந்து நெசவாளர் குடும்பங்களின் முன்னேற்றத்துக்கு ஆதரவு அளிக்க முன்வர வேண்டும் என கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்


தொடக்க விழா

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு தீபாவளி கதர் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி காந்தியடிகளின் உருவ படத்துக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தியதோடு, குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி சிறப்பு கதர் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் பேசும்போது கூறியதாவது:- 

முன்வர வேண்டு்ம்

தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் பல லட்சக்கணக்கான ஏழை, எளிய நூற்போர், நெசவாளர்களுக்கு இடையராத வேலை வாய்ப்பை அளித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி ஆற்றி வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தியடிகளின் பிறந்த தினம் மற்றும் தேசிய தலைவர்களின் நினைவு தினம் ஆகிய தினங்களில் அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி உடுத்தி, கதர் நெசவாளர் குடும்பங்களின் முன்னேற்றத்துக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும். 

கள்ளக்குறிச்சி மாவட்ட கதர் விற்பனை அங்காடி மூலமாக தரமான அசல் கதர் பட்டுப்புடவை, கதர் பருத்தி ரகங்கள் மற்றும் கதர் பாலியஸ்டர் ரகங்கள், வேட்டி, துண்டு, ரெடிமேட் சட்டை, போர்வை, தரமான இலவம் பஞ்சு மெத்தை, விரிப்புகள், தலையணை, தலையணை உறை, சோப்பு வகைகள், தேன் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இதில் கதர் மற்றும் பட்டு புடவைகளுக்கு ஜி.எஸ்.டி.வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  அரசு ஊழியர்களுக்கு கதர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 10 மாத சுலப தவணையில் கடன் வழங்கப்படுகிறது. 

ரூ.82 லட்சம் விற்பனை இலக்கு

எனவே இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்திற்கு கதர் ஆடையை அணிந்து மகிழ்ச்சியுடன் தீபாவளி மற்றும் விழாக்காலங்களை கொண்டாடி மகிழுங்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இந்த ஆண்டு கதர் விற்பனை இலக்கு ரூ.82 லட்சத்து 11 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை விட கூடுதல் விற்பனை மேற்கொள்ள பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பேராதரவு தர வேண்டும.
இவ்வாறு அவர் கூறினார். 

இ்ந்த நிகழ்ச்சியில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், உதவி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார், கதர் அங்காடி மேளாலர் கலியமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story