குற்றச்சம்பவங்களை தடுக்க ரோந்து வாகனங்கள் அறிமுகம்
கரூர் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீஸ் ரோந்து வாகனங்களை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் தொடங்கி வைத்தார்.
கரூர்,
ரோந்து வாகனங்கள் அறிமுகம்
கரூர் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையிலும் இருசக்கர ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார்.
இதில், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் கலந்து கொண்டு, 20 இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுமக்கள் நல்லுறவு
திருச்சி சரகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் போலீஸ், பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்துவதற்காகவும், போலீசாரின் கண்காணிப்பை அதிகரிக்கவும் இருசக்கர வாகனத்தில் போலீசார் ரோந்து செல்லும் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இதன் ஒருமுயற்சியாக கரூர் மாவட்டத்தில் 20 போலீஸ் ரோந்து அதிகாரிகள் (பீட்) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடங்களிலும் ரோந்து பணியினை மேற்கொள்வார்கள்.
அடகு கடை
மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அனைத்து மகளிர் கல்லூரிகள், பள்ளிகள், தங்கும் விடுதிகள் ஆகிய இடங்களிலும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். மூத்த குடிமக்கள் வசிக்கின்ற முதியோர் இல்லம், தனியாக இருக்கும் மூத்த குடிமக்கள் வசிக்கும் இடங்களுக்கும் சென்று அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து, உதவுவார்கள். இதன்மூலமாக சட்டம்-ஒழுங்கும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளும் மேம்படும்.
திருச்சியில் குற்றச்சம்பவங்களை தடுக்க நேற்று (நேற்று முன்தினம்) ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் லால்குடியில் ஒரு அடகு கடையை உடைத்து வெளியே சென்றபோது குற்றவாளிகளை ரோந்து போலீசார் கைது செய்து பொருட்களை மீட்டனர். இவ்வாறாக ரோந்து அதிகாரிகள் தொடர்ந்து செயல்படும்போது குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேம்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story