தஞ்சையில் மாணவ மாணவிகள் சைக்கிள் பேரணி
இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சையில் மாணவ, மாணவிகளின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர்:
இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சையில் மாணவ, மாணவிகளின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
சைக்கிள் பேரணி
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் அனைத்து ஸ்மார்ட் சிட்டிகளிலும் இந்தியாவின் 75-வது சுதந்திரதின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இளைஞர்கள் சைக்கிள் ஓட்டுதல், பெண்கள் நடப்பதற்கான சுதந்திரம் என்ற அடிப்படையில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.
அதன்ஒரு பகுதியாக தஞ்சை ஸ்மார்ட் சிட்டி மற்றும் மாநகராட்சி சார்பில் மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் பேரணி தஞ்சையில் நேற்றுகாலை நடந்தது. சிவகங்கை பூங்கா காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட இந்த சைக்கிள் பேரணியை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
75 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
இதில் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, அரசர் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பி.வி.செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிளேக் மேல்நிலைப்பள்ளி, ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்யாணசுந்தரம் மேல்நிலை பள்ளியை சார்ந்த 75 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சாலை, காந்திஜிசாலை, தென்கீழ்அலங்கம், கொண்டிராஜபாளையம், கீழவீதி வழியாக சென்று தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள விவசாயி சிலை அருகே நிறைவடைந்தது.
நடைபயணம்
இதில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், மேலாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ், தொழில் வர்த்தக சங்க தலைவர் பாலசுந்தரம், மாநகராட்சி பொறியாளர் கார்த்திகேயன், இண்டாக் கவுரவ செயலாளர் முத்துக்குமார், தஞ்சை ஸ்மார்ட் சிட்டி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இரவு 7 மணிக்கு 75 பெண்கள் கலந்து கொண்ட சுதந்திர நடைபயணம் தஞ்சை ராஜராஜன் மணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு முக்கியவீதிகள் வழியாக சென்று தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து சைக்கிள் பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும், நடைபயணத்தில் பங்கேற்ற பெண்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story