பெருமாள் கோவில்களில் புரட்டாசி 3-வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் புரட்டாசி 3-வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Oct 2021 9:50 PM GMT (Updated: 2 Oct 2021 9:50 PM GMT)

நெல்லையில் பெருமாள் கோவில்களில் புரட்டாசி 3-வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நெல்லை:
புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி நெல்லையில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கொரோனா ஊரடங்கு தடை உத்தரவால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் கோவில்களில் விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். என்றாலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புரட்டாசி சனிக்கிழமை இரவில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கருடசேவை நடைபெறும். ஆனால் தற்போது கொனோரா பரவல் காரணமாக தமிழகத்தில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மத வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்கள் திறக்கப்படுவதில்லை.

தென் திருப்பதி

நெல்லை அருகே மேலதிருவேங்கடநாதபுரத்தில் உள்ள தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி அதிகாலை 5 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொரோனா பரவல் காரணமாக இரவில் கருடசேவை நடைபெறவில்லை. இருப்பினும் கோவிலில் கருடன் மீது பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதேபோல் நெல்லை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. பெருமாள், திருப்பதி வெங்கடாஜலபதி போல் புஷ்ப அங்கி அலங்காரத்தில் காட்சி கொடுத்தார். இரவில் கருடன் மீதேறி காட்சி கொடுத்தார்.

எட்டெழுத்து பெருமாள் கோவில்

நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு எட்டெழுத்து பெருமாள், ஆதிசிவன், சிவசுப்பிரமணியர், பெரியபிராட்டி அம்மன், இளையபெருமாள், ஆத்தியப்பர், ஆஞ்சநேயர், விநாயகர், முருகன், மாயாண்டி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எட்டெழுத்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கொரோனா ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கோவில் முன்பு நின்று வழிபட்டு சென்றனர்.

காட்டு ராமர் கோவில்

அருகன்குளம் காட்டு ராமர் கோவிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமையையொட்டி ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
ஜடாயு தீர்த்தம் லட்சுமி நாராயணர் கோவிலில் பெருமாளுக்கும், ஜடாயு திருமஞ்சனமும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

ஆஞ்சநேயர்

நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று தன்வந்திரி மகாவிஷ்ணு, கனகமாலட்சுமி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பெருமாளையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டு சென்றனர்.
பாளையங்கோட்டை வேதநாராயணன், அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில், நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில், நெல்லை கொக்கிரகுளம் நவநீத கிருஷ்ண சுவாமி ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடும், இரவில் கருட சேவையும் நடந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கோவில் நடை சாத்தப்பட்டு இருந்தது.

Next Story