தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Oct 2021 4:36 AM IST (Updated: 3 Oct 2021 4:36 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மின்னல் வேக நடவடிக்கை 
சேலம் அம்மாபேட்டை காலனி எஸ்.கே. டவுன்ஷிப் 36-வது வார்டில் சாலையில் 2 குப்பைத்தொட்டிகள் இருந்தும், அந்த தொட்டிகளின் அருகில் குப்பைகள் குவிந்து கிடந்தன. அங்கு துர்நாற்றம் வீசியதுடன், அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் இருந்ததாக நேற்று முன்தினம் (1-ந் தேதி) ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தி வெளியான உடனே அதிகாரிகள் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்தனர். அதாவது, குப்பை தொட்டிகள் இருந்த இடத்தில் சிதறி கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன. அங்கு பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டன. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
-சேகர், அம்மாபேட்டை, சேலம்.

தண்ணீர் பிரச்சினை
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா இடங்கணசாலை பேரூராட்சி 1-வது வார்டு மாட்டையாம்பட்டி கிழங்கு தெருவில் 2 மாதமாக குடிநீர் சரியாக வருவதில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தண்ணீரை தேடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பேரூராட்சியில்  பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.முருகன், கிழங்குதெரு, சேலம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கால்லாங்குலம் மற்றும் மேற்கு பனங்காடு ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் பொதுமக்கள் குடிநீரை தேடி பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுபற்றி பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தனுஷ், பனங்காடு, நாமக்கல்.

திறக்கப்படாத நவீன கழிப்பிடம்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் 12-வது வார்டில் ஆண்களுக்கான நவீன கழிப்பிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகியும் அந்த நவீன கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த கழிப்பிடத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.

சேறும், சகதியுமான சாலை
சேலம் நகரம் மெய்யனூர் ராம்நகர் பழைய தபால் அலுவலகம் தெருவில் கடந்த 2 ஆண்டுகளாக தார்சாலை திட்டத்தில் சாலை பணி தொடங்கப்பட்டு பாதியில் நிற்கிறது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே பாதியில் நிற்கும் இந்த சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.தமிழழகன், மெய்யனூர், சேலம்.
நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர் கிராமம் சத்யா நகர் பகுதியில் அரசு பள்ளியின் முன் சாலை வசதி இல்லை. இதுவரை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. மண் சாலை என்பதால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அதன் வழியே செல்வதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது.  சாலை சீரமைக்கப்பட்டால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.
-ஊர்மக்கள், காடச்சநல்லூர், நாமக்கல்.

சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் நரசோதிப்பட்டி முகில் நகர், 8-வது தெருவில் குப்பைத்தொட்டி இல்லாததால் அந்த பகுதி சாலையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குறுகிய பாதை என்பதால் அந்த வழியாக கடந்து செல்லவே சிரமமாக இருக்கிறது. மேலும் நீண்ட நாட்களாக குப்பைகள் அப்படியே கிடக்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ப.மங்கை அரசி,, நரசோதிப்பட்டி, சேலம்.

நாய்களுக்கு தோல் நோய்
சேலம் கிச்சிப்பாளையம் கடம்பூர் முனியப்பன் கோவில் பகுதியில் சுற்றி திரியும் நாய்களுக்கு தோல் நோய் உள்ளது. தோல் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் அந்த பகுதியில் சுற்றி திரிவதால் அங்குள்ள மற்ற நாய்களுக்கும் இந்த நோய் பரவி உள்ளதால், நாய்களுக்கு வெறி பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே நோய் பாதித்துள்ள இந்த நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், கிச்சிப்பாளையம், சேலம்.

புதிய பாலம் கட்டப்படுமா? 
சேலம் மணியனூர் 50-வது வார்டு காந்தி நகரில் 2 சாலைகளை இணைக்கும் பகுதியில் உள்ள சிறிய பாலத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை சீரமைக்க பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இரவு நேரத்தில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் புதிய பாலம் கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பிரனேஷ்வர், மணியனூர், சேலம்.

Next Story