ரூ.2,100 கோடியில் சென்னை சுற்று வட்ட சாலை பணி விரைவில் தொடக்கம்


ரூ.2,100 கோடியில் சென்னை சுற்று வட்ட சாலை பணி விரைவில் தொடக்கம்
x
தினத்தந்தி 3 Oct 2021 10:12 AM GMT (Updated: 3 Oct 2021 10:12 AM GMT)

எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரை ரூ.2,100 கோடியில் சென்னை சுற்று வட்ட சாலை பணி விரைவில் தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் 100 அடி சாலைகள், பைபாஸ் சாலை சென்னை சுற்றுவட்ட சாலைகள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து கடந்த 2014-ம் ஆண்டில் பஞ்செட்டி கிராமத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நிலங்கள் அளவிடும் பணி, கையகப்படுத்தும் பணிகள் செயல்படுத்தப்படுகிறது. காட்டுப்பள்ளி எண்ணூர் காமராஜர் துறைமுகம் முதல் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி இடையே 133 கிலோமீட்டர் நீளத்திற்கு சென்னை வெளியே முதல் கட்டமாக காட்டுப்பள்ளி எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரை 25.400 கிலோமீட்டர், 2-வது கட்டமாக தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழி சாலை வரை 26.100 கிலோமீட்டர், 3-வது கட்டமாக திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 30.100 கிலோமீட்டர், 4-வது கட்டமாக ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை 23.800 கிலோமீட்டர், 5-வது கட்டமாக சிங்கப்பெருமாள் கோவில் முதல் பூஞ்சேரி வரை 27.400 கிலோ மீட்டர் வரை சென்னை சுற்று வட்ட சாலை அமைப்பு திட்டத்தின் பணிகள் நடைபெற உள்ளது.

ரூ.2 ஆயிரத்து 100 கோடி டெண்டர்

காட்டுப்பள்ளி எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரை 25.400 கிலோமீட்டர் இடையே காட்டுப்பள்ளி அருகே பக்கிங்காம் கால்வாய் கடக்கும் வகையில் 1.400 கிலோ மீட்டர் மேம்பாலமும் மீஞ்சூர், அனுப்பம்பட்டு இடையே ரெயில்வே மேம்பாலம், மீஞ்சூர், காட்டூர் சாலைகள், மீஞ்சூர் பொன்னேரி சாலைகள் உள்ள இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கவும் காட்டுப்பள்ளி, நெய்தவாயல், கல்பாக்கம், நாலூர், அனுப்பம்பட்டு, ஜெகநாதபுரம், ஆமூர், பஞ்செட்டி போன்ற கிராமங்களின் வழியாக 100 மீட்டர் அகலத்திற்கு இந்த சாலை உருவாக்கப்பட உள்ளது.

இந்த சாலை பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் கால்வாய் மைய தடுப்புகளும் அமைக்கப்பட உள்ளதற்கான ரூ.2 ஆயிரத்து 100 கோடி டெண்டர் விடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story