ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 3 Oct 2021 2:09 PM GMT (Updated: 3 Oct 2021 2:09 PM GMT)

மழையால் குளுகுளு காலநிலை நிலவுவதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஊட்டி

மழையால் குளுகுளு காலநிலை நிலவுவதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

பூத்துக்குலங்கும் மலர்கள்

கொரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் 4 மாதங்கள் மூடப்பட்டு இருந்தது. கட்டுப்பாடுகள் தளர்வை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி முதல் தோட்டக்கலை பூங்காக்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களிலும் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்பட அனைத்து தோட்டக்கலை பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக 2-வது சீசனையொட்டி நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகளில் பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. அவை தற்போது பூங்காக்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூத்துக் குலுங்குகின்றன. 

குளுகுளு காலநிலை

விடுமுறை நாளான நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மலர் மாடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட 12 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர். அதன் முன்பு நின்று குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் 3 ஆயிரம் பூந்தொட்டிகளை கொண்டு செய்யப்பட்ட மலர் அலங்காரத்தை பார்வையிட்டனர்.

மழையால் குளுகுளு காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகு நிறைந்த பூங்காவை கண்டு ரசித்தனர். கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், பெரிய புல்வெளி மைதானம், இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை பார்த்து ரசித்தனர்.

சீசன் களைகட்டியது

நேற்று முன்தினம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 8,804 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். நேற்று 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூங்காவை கண்டு ரசித்தனர். முழு ஊரடங்குக்கு பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர். 

நீலகிரிக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை தாவரவியல் பூங்காவுக்கு வருபவர்கள் எண்ணிக்கையை கொண்டு கணக்கிடப்படுகிறது. மற்ற சுற்றுலாத் தலங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் 2-வது சீசன் களைகட்டி உள்ளது.


Next Story