வைகை அணையில் மூழ்கி ராணுவவீரர் பலி


வைகை அணையில் மூழ்கி ராணுவவீரர் பலி
x
தினத்தந்தி 3 Oct 2021 4:55 PM GMT (Updated: 3 Oct 2021 4:55 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையில் மூழ்கி ராணுவ வீரர் பலியாகினார்.

ஆண்டிப்பட்டி: 

மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 43). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி புவனேஸ்வரி (34). இவர்கள் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை பகுதிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் அணையில் உள்ள பூங்காவை சுற்றி பார்த்து விட்டு, வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய்க்கு செல்லும் மதகு பகுதிக்கு சென்றனர். அந்த மதகு பகுதியில் உள்ள தண்ணீரில் விஜயகுமார் மட்டும் குளித்தார். 


அப்போது ஆழமான பகுதிக்கு அவர் சென்றதாக தெரிகிறது. இதில் அவர் நீரில் மூழ்கினார். உடனே குடும்பத்தினர் அவரை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வழியிலேயே விஜயகுமார் இறந்து விட்டதாக கூறினர். 

இதுகுறித்து வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் ராணுவ வீரர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அவருடைய குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.  

Next Story