வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 3 Oct 2021 6:21 PM GMT (Updated: 3 Oct 2021 6:21 PM GMT)

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 5,715 பதவியிடங்களுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 3,773 பதவியிடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து வந்த நிலையில் தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளது.

பாதுகாப்பு

இதையடுத்து ஒன்றியங்கள் வாரியாக வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு அவற்றை ஒரு இரும்பு பெட்டிக்குள் வைத்து அதற்கு சீல் வைக்கப்பட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 22 ஊராட்சி ஒன்றியங்களிலும் வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகளை முதல்கட்ட தேர்தலுக்கு முந்தைய நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி முடிந்ததும் நாளை மாலை அவர்களிடம் ஒப்படைத்து போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story