செங்கோட்டை- கோட்டைவாசல் இடையே அரசு பஸ் மீண்டும் இயக்கம்- பொதுமக்கள் மகிழ்ச்சி


செங்கோட்டை- கோட்டைவாசல் இடையே அரசு பஸ் மீண்டும் இயக்கம்- பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 3 Oct 2021 8:44 PM GMT (Updated: 3 Oct 2021 8:44 PM GMT)

4 மாதங்களுக்கு பிறகு செங்கோட்டை- கோட்டைவாசல் இடையே மீண்டும் பஸ் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செங்கோட்டை:
4 மாதங்களுக்கு பிறகு செங்கோட்டை- கோட்டைவாசல் இடையே தமிழக அரசு பஸ் மீண்டும் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொது போக்குவரத்து

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் கேரள எல்லை வரையிலான போக்குவரத்தை நிறுத்திய கேரள அரசு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் மாதம் கேரள எல்லையான ஆரியங்காவு வரை பொது பேருந்து சேவையை தொடங்கியது.
இதனால் தமிழகத்தில் இருந்து செல்லும் பொதுமக்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் பணிக்கு வந்து செல்வோர் தமிழக எல்லையில் இருந்து ஆரியங்காவு செல்ல பெருமளவில் பாதிக்கப்பட்டனர். பொதுமக்களின் நலன்கருதி பொது தற்போது தமிழக- கேரள எல்லையான கோட்டைவாசல் வரை பொது போக்குவரத்தை கேரள அரசு 2 மாதங்களுக்கு நீட்டித்து உள்ளது. இதையடுத்து செங்கோட்டையில் இருந்து தமிழக-கேரள எல்லை பகுதியில் இருக்கும் கோட்டை வாசலுக்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்லவேண்டும் என்றால் பஸ் வசதி கிடையாது. அப்படி செல்லவேண்டும் என்றால் அதிக பணம் கொடுத்து ஆட்டோ, கார்கள் மூலம் சென்று வந்தனர். இதனால் பயனிகள் சிரமப்பட்டனர்.

பஸ் இயக்கம்

இந்தநிலையில் பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி சுமார் 4 மாதங்களுக்கு பின்பு செங்கோட்டையில் இருந்து கோட்டைவாசலுக்கு தமிழக அரசு நேற்று முதல் பஸ் சேவையை தொடங்கியது. இதனால் இருமாநில பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பயணிகள், பொதுமக்கள் கூட்டத்தை பொறுத்து மற்றொரு பஸ் விடப்படும் என்று தெரிகிறது. மேலும் கேரளாவில் இருந்து பஸ்சில் வரும் நபர்களை புளியரை கொரோனா தடுப்பு மருத்துவ சோதனை சாவடியில் தீவிர சோதனைக்கு பின்புதான் சுகாதார துறையினர் தமிழகம் வருவதற்கு அனுமதித்து வருகின்றனர்.

Next Story