சார்-பதிவாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு
சார்பதிவாளர் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி
மணப்பாறை அடுத்த மாகாளிபட்டியில் மணப்பாறை வட்டார போக்குவரத்து பகுதிநேர அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு மோட்டார் வாகன ஆய்வாளராக (பொறுப்பு) சுந்தரராமன் உள்ளார். இங்கு புரோக்கர் மூலம் லஞ்சம் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 30-ந்தேதி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் மணப்பாறை வட்டார போக்குவரத்து பகுதிநேர அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் கைப்பற்றப்பட்டதுடன், ஆனந்தன், பக்ருதீன் ஆகியோர் புரோக்கராக இருந்து சுந்தரராமனுக்கு பணம் வசூல் செய்து கொடுத்தது தெரியவந்தது.
வழக்குப்பதிவு
இதனால் சுந்தரராமன், புரோக்கர்கள் ஆனந்தன், பக்ருதீன் ஆகியோர் மீது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோல் முசிறியில், சார்-பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சார்பதிவாளர் சுகுமார், 4 பத்திர எழுத்தர்கள், 2 புரோக்கர்கள் ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் (பொறுப்பு) சுந்தரராமன், முசிறி சார்பதிவாளர் சுகுமார் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
Related Tags :
Next Story