தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 5 Oct 2021 1:29 AM IST (Updated: 5 Oct 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் ரெயில்வே மேம்பாலத்தில் அபாய நிலையில் கீழே விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. போக்குவரத்தின்போது இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றினர்.  இதையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், நெ.1 டோல்கேட், திருச்சி. 

குட்டைகளை தூர்வார வேண்டும் 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், கொளக்குடியில் இருந்து தும்பலம் செல்லும் சாலையின் தென்புறம் கொளக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குட்டையில் மண் திட்டுகள் அதிகமாக உள்ளன.  இதனால் மழை பெய்யும் போது இந்த குட்டையில் அதிக அளவில் மழைநீர் தேங்க முடியாத நிலை உள்ளது. மேலும் இதே குட்டையின் வடபுறம் அப்பணநல்லூர் பழைய குட்டை உள்ளது. இதில் நிறைய இடங்களில் சேதம் உள்ளன. ஆதலால் சேதமடைந்த பகுதியின் வழியாக நீர் வெளியேறி வீணாகிறது. எனவே இந்த குட்டைகளை தூர்வாரி அதிக அளவில் மழைநீர் தேங்க வழிவகை செய்து இப்பகுதியில் நிலத்தடி நீர் பெருக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மதார்ஷா, கொளக்குடி, திருச்சி. 

வரத்து வாரிகள் தூர்வாரப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம்,  கீரனூர் பெரிய குளம், தவரங்குளம் ஆகிய இரண்டு குளத்திற்கும் வரும் நீர் வரத்து வாரியில் செடி, கொடிகள் முளைத்து தண்ணீர் செல்ல முடியாமல் காட்சி அளிக்கிறது. இதனால் நீர்வரத்து தடைபட்டு குளங்களில் தண்ணீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும். 
செய்யது இஸ்மாயீல், கீரனூர், புதுக்கோட்டை. 

பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் பணி
கரூர் 48-வது வார்டு வெங்கக்கல்பட்டி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் அந்த பணி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மழைபெய்யும்போது அப்பகுதியில் வடிகால் வசதி இல்லாமல் மழைநீர் சாலையில் சென்று அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
லோகநாதன், வெங்கக்கல்பட்டி, கரூர். 

எலும்புகூடு போல் காட்சி அளிக்கும் மின்கம்பம் 
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் திருநல்லூர் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் மின்சார தேவைக்காக அப்பகுதியில் மின் கம்பம் அமைக்கப்பட்டு அதன் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு  மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் கீழே  விழுந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சிவக்குமார், திருநல்லூர், புதுக்கோட்டை. 

தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் 
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் தாலுகா பெரியம்மாபாளையம் கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பராமரிக்கப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும்  அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மேலும் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் செல்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், பெரம்பலூர். 

அடிப்படை வசதிகள் செய்துதரப்படுமா? 
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம்,  கள்ளக்குடி பஞ்சாயத்து கந்தசாமி உடையார் நகர் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலையில் செல்லும்போது வாகனங்கள் பழுதடைவதுடன் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் இப்பகுதியில் தெரு விளக்கு வசதியும் இல்லாததால் இரவு நேரத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.  முறையான குடிநீர் வசதியும் இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஜான்அந்தோணி பிரபாகர், கள்ளிக்குடி, திருச்சி. 

கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் காற்று அடிக்கும்போது பறந்து செல்வதுடன் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யும்போது இதில் மழைநீர்தேங்கி அதில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
குணசேகரன், மீன்சுருட்டி, அரியலூர். 

கூட்டம்-கூட்டமாக திரியும் தெரு நாய்கள்
திருச்சி தென்னூர் 11-வது கிராஸ் ரகுமானியபுரம், ராமச்சந்திரபுரம், சாஸ்திரி ரோடு, உழவர் சந்தை, பிரண்ட்ஸ் காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. பொதுமக்கள் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வரும்போது அதனை மோப்பம் பிடித்து பின்னாலேயே வருகின்றன. இதனால், தெருமக்கள் குறிப்பாக சிறுவர்கள் அச்சப்படுகின்றனர். மேலும், வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை கவ்வி கொண்டு ஓடி விடுகின்றன. ஆகவே, தெரு நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சிவா, தென்னூர், திருச்சி.

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள்
திருச்சி மாநகராட்சி 53-வது வார்டு உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகர் மேற்கு விஸ்தரிப்பு 2-வது குறுக்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் பழுதடைந்து, சிமெண்டு பூச்சுகள் கீழே விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராஜா, திருச்சி. 
இதேபோல் திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 42-வது வார்டு கே.கே.நகர் சாலை, பெரியார் மணியம்மை பள்ளிக்கு எதிர்புறம் அமைந்துள்ள, எஸ்.எம்.இ.எஸ். காலனி 1-வது தெருவில் அமைந்துள்ள மின் கம்பம் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஆகவே, ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன் பழுதடைந்த இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கே.கே.நகர் சாலை, திருச்சி

குண்டும், குழியுமான தார்ச்சாலை 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சா. அய்யம்பாளையம் ஊராட்சியில் தெற்கியூர் தார்ச்சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழை பெய்யும்போது சேறும் சகதியுமாக உள்ளதால் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பாலகிருஷ்ணன், சா.அய்யம்பாளையம், திருச்சி. 

குரங்குகள் தொல்லை அதிகரிப்பு 
திருச்சி மாவட்டம், வளையெடுப்பு பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இந்த குரங்குகள் அப்பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச்சென்றுவிடுகின்றன. மேலும் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும்போது அவர்களை கடிக்க வருவதுபோல் பயமுறுத்துகின்றன. எனவே இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சேகர், வளையெடுப்பு, திருச்சி. 


Next Story