சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி-அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பரபரப்பு


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2  பெண்கள் தீக்குளிக்க முயற்சி-அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Oct 2021 5:05 AM IST (Updated: 5 Oct 2021 5:05 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
சேலம் மாவட்டம் வாழப்பாடி சி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்மலர் (வயது 28). இவர், நேற்று காலை தனது ஆண் குழந்தையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். பின்னர் அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அதில், பொன்மலருக்கும், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததோடு, ஏழுமலை 3 ஏக்கர் நிலம் கேட்டு மனைவியை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த பொன்மலர், அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரையும் குடும்பத்தினர் சமாதானம் செய்து சேர்த்து வைத்தனர்.
கணவர் மீது நடவடிக்கை
இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பொன்மலருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் ஏழுமலை, குழந்தையின் பிறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அதுகுறித்தும், சொத்து கேட்டும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து குழந்தையின் பிறப்பு குறித்து அவதூறாக பேசி வருவதால், மனஉளைச்சலால் பொன்மலர் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மேலும் அவரது கணவர் மற்றும் மாமியார், உறவினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
சேலம் சிவதாபுரத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவர், நேற்று காலை தனது மகனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அதில், வள்ளியம்மாள் வசிக்கும் பகுதியில் அவரின் தாயார் மற்றும் அண்ணன் குடும்பத்தினர் வசிக்கின்றனர். வள்ளியம்மாள் தனது தாயை பார்க்க அடிக்கடி சென்றபோது, அவரின் அண்ணன் மற்றும் குடும்பத்தினர் சொத்திற்காக இங்கு வந்து செல்கிறாயா? எனக்கூறி தகராறு செய்துள்ளனர்.
போலீசில் புகார்
இது தொடர்பாக அவர் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வள்ளியம்மாள் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்துவற்காக போலீசார் டவுன் போலீஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் ஏற்றி அழைத்து சென்றனர்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முதன் முதலாக நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக 2 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story