எடப்பாடி அருகே விஷ ஊசி போட்டு மகனை கொன்ற தந்தை-புற்றுநோயால் அவதிப்பட்டதால் விபரீத முடிவு


எடப்பாடி அருகே விஷ ஊசி போட்டு மகனை கொன்ற தந்தை-புற்றுநோயால் அவதிப்பட்டதால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 5 Oct 2021 5:12 AM IST (Updated: 5 Oct 2021 5:12 AM IST)
t-max-icont-min-icon

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததால், அதனை தாங்கமுடியாமல் மகனை விஷ ஊசி போட்டு தந்தை கொலை செய்தார்.

எடப்பாடி:
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததால், அதனை தாங்கமுடியாமல் மகனை விஷ ஊசி போட்டு தந்தை கொலை செய்தார். 
லாரி டிரைவர்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் கச்சுபள்ளி கிராமம் குடைக்காரன்வளவு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பெரியசாமி (வயது 44). இவருடைய மனைவி சசிகலா.
இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகனும், 11 வயதில் வண்ணத்தமிழ் என்ற மகனும் இருந்தனர். வண்ணத்தமிழ் அங்கு உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். அவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தான். அவனுக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.
திடீர் சாவு
இதற்கிடையே வண்ணத்தமிழ் இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. அவனது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. அப்போது வண்ணத்தமிழ் புற்றுநோய் பாதிப்பில் இறக்கவில்லை என்றும், விஷ ஊசி போட்டு அவன் கொலை செய்யப்பட்டான் என்றும் தகவல் பரவியது.
இதனை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், கொங்கணாபுரம் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பெரியசாமி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். 
உடனே போலீசார் வண்ணத்தமிழின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பெரியசாமியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்
போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
பெரியசாமியின் மகன் வண்ணத்தமிழ், புற்றுநோயால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வந்ததுடன், தினமும் வலியால் துடித்துள்ளான். தினம் தினம் மகன் படும் வேதனையை பெரியசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 
இதனால் மகனை கொலை செய்து விடுவது என்ற விபரீத முடிவுக்கு அவர் வந்துள்ளார். அதற்காக தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவரை அணுகி உள்ளார்.
விஷ ஊசி போட்டு கொலை
அந்த நபர், பெரியசாமி வீட்டுக்கு வந்து வண்ணத்தமிழுக்கு விஷ ஊசி போட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வண்ணத்தமிழ் பரிதாபமாக இறந்து விட்டான். இந்த தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்துள்ளது. 
அப்போது வலியை குறைப்பதற்காகத்தான் ஊசி போடப்பட்டுள்ளதாக பெரியசாமி கூறியுள்ளார். ஆனாலும் விஷ ஊசி போட்ட தகவல் அரசல் புரசலாக போலீசாரின் கவனத்துக்கு வந்துள்ளது. அதன்பிறகுதான் போலீசார் துரித நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
இருந்தாலும், வண்ணத்தமிழ் உடல் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகுதான், வண்ணத்தமிழுக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டது எந்த வகையான விஷம் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பரபரப்பு
இதுதொடர்பாக வண்ணத்தமிழுக்கு ஊசி போட்ட ஆஸ்பத்திரி ஊழியரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புற்றுநோயால் மகன் படும் வேதனையை தாங்கிக்கொள்ள முடியாமல் லாரி டிரைவர், விஷ ஊசி போட்டு அவனை கொலை செய்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story